நவம்பர் 30. என்னால் மறக்க முடியாத நாள். கொரோனா அச்சத்தால் வீட்டை விட்டு வெளியே போகாத எனக்கு நுகர்வு சக்தி, நாவின் சுவை அறியும் திறன் இரண்டும் சட்டென்று இல்லாமல் போனது. பரிசோதனை செய்ததில் 30ம் தேதியன்று ‘கொரோனா பாசிடிவ்’ என்று வந்தது. சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யும் பழக்கம் இருப்பதாலும், இறைவன்மீது நம்பிக்கை இருப்பதாலும் இதிலிருந்து மீண்டுவருவேன் என்று நம்பிக்கையுடன் மருத்துவமனை புறப்பட்டேன்.
தாக்கம் கடுமையாக இல்லையென்று வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளச் சொன்னார்கள். தினமும் அரசுப் பிரதிநிதி தொலைபேசியில் விசாரித்தார். மொத்த வீட்டு நிர்வாகமும் இரண்டு பெண்குழந்தைகள், கணவர் கையில். ஒரே அறையில் அடுத்த 14 நாட்கள் சிறைவாசம். டிவி இணைப்பு கிடையாது. கைபேசி சிக்னல் அங்கு வராது. புத்தகங்கள் மட்டுமே துணை. வேளைக்கு உணவு கிடைத்தாலும் யாருடனும் பேசாமல், வெளியே வராமல், நான்கு சுவர்களைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். 14 நாட்கள் வீட்டிலேயே வனவாசம். சிறைச்சாலை எனில் என்னவெனப் புரிந்தது.
14 நாட்களுக்குப் பிறகு பிரச்சினை முடிந்தது என எண்ணினால், சுவையின்மை, வாசனை உணரும் தன்மை இரண்டும் இந்தக் கட்டுரை எழுதும் நொடிவரை வரவில்லை. சமையலில் உப்பு, காரம், இனிப்பு, புளிப்பு இருக்கிறதா இல்லையா எனத் தெரியவில்லை. Muscle loss (தசைப்பிடிப்பு தளர்வு) என்பார்கள். அது சரியாகப் பல வாரங்கள் ஆனது. மூட்டுகளுள் ‘லொட்டு லொட்டு’ என்று சத்தம், தளர்வு, வலி எல்லாம் இருந்தது. அது ஓரளவுக்கு சரியாகப் பல மாதங்கள். மறதியும் சற்றுக் கூடியுள்ளது. இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் யாருக்குமே இது புரியுமா எனச் சந்தேகமே. காரணம், நாம் அனைவரும் நமக்கு அடிவிழுந்த பின்னர்தான் மனம் மாறும் தன்மை கொண்டவர்கள்.
அரசாங்கம் கெஞ்சினாலும், மக்களைக் காக்க பலர் உயிரைக் கொடுத்திருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தொடர்ந்து முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளி காக்காமல், அப்படித்தான் செய்வேன் என்று பிடிவாதமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். சமைக்க வேண்டி நீரில் போடப்பட்ட நண்டு வெந்நீரில் இதமாக நீந்துமாம். அது சுடத் துவங்கும்போது தவிக்குமாம். இதைத்தான் ‘சுட்டால் தெரியும் நண்டுக்கு’ என்பார்கள். எனக்கு ஏற்பட்டுள்ள சரீர சிரமங்கள், வலிகள் எல்லாம் நிரந்தரமா எனத் தெரியாது. ஆனால், அண்டை வீட்டாருக்கு வந்தபோது பாதுகாப்பாக இல்லாமல் அலட்சியம் காட்டியதால் நான் அவதிப்படுகிறேன். இன்று தெருவில் காண்போர் பலர் வம்பை, நோயை வெற்றிலைப் பாக்கு வைத்து ‘வா’ என அழைக்கிறார்கள்.
இந்த ஓர் அனுபவக் கட்டுரை மட்டுமல்ல, இதுபோல நூறு எழுதினாலும், படித்தாலும் சொந்த அனுபவம்போல வராது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது என்பதைப் புரிந்துக்கொண்டு, மத்திய மாநில அர சாங்கத்தின் வழிகாட்டுதல்படி நடப்போம் என உறுதி ஏற்போம்!!