கூகுள், முகநூல் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தளத்தில் செய்திகளைப் பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும். இதற்காக ‘நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட்’ என்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நிறைவேற்றியுள்ளது. இந்த சட்ட விவகாரத்தில், கடந்த வாரம் முகநூல், ஆஸ்திரேலியா பயனர்களுக்கு செய்திப் பதிவுகள் வராத வண்ணம் தங்கள் தளத்தில் தடை விதித்தது. ஆனால் அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தன் முடிவை பின்வாங்கிக் கொண்டது முகநூல். அச்சட்டத்தின் முக்கிய நோக்கங்கள், கூகுள், முக நூல் போன்ற நிறுவனங்களுக்குப் பொருந்தாது என சில சட்டத் திருத்தங்களோடு ‘நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட்’ நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த இணைய யுகத்தில் தங்கள் லாபத்தை இழந்த செய்தி நிறுவனங்களுக்கு இந்தச் சட்டம் உதவுவதாக இருக்கும் என்கிறது ஆஸ்திரேலியா. ஆனால், செய்தி வலைதளங்களுக்கு பயனர்களைத் தருவதன் மூலம், பத்திரிகை நிறுவனங்களுக்கு தாங்கள் உதவிக் கொண்டிருப்பதாக கூகுள், பேஸ்புக் தரப்பு வாதிடுகின்றன. இச்சட்டத்தை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனால், கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளும் இந்த ‘நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட்’ சட்டத்துக்கு தன் விருப்பத்தை தெரிவித்திருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.