போர் விமானங்களில் புதிய மாற்றம்

போர்களில் எதிரி நாட்டு போர் விமானங்களை அழிக்க, இலக்கு வைக்கப்பட்ட விமானத்தை தானே துரத்திச்சென்று தாக்கி அழிக்கும் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைத் தடுக்கவும் போர் விமானங்களில் இரண்டு தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஃப்ளேர் என்ற தொழில்நுட்பத்தில் விமானங்கள், ஏவுகணையில் இருந்து தப்பிக்க, அதிக அளவிலான நெருப்பை உமிழும். இதனால் ஏவுகணைகள் திசைமாறிவிடும். ஆனால், விமானம் தயாரிக்க பயன்படும் அலுமினிய கலவை உலோகத்தை பயன்படுத்தி விமானங்களை துரத்தும் ஏவுகணைகளிடம் இருந்து இவை தப்பிக்க முடியாது. எனவே, ஃப்ளோரைவிட மேம்பட்ட தொழில்நுட்பமாக சாஃப் தொழில்நுட்பம் கருதப்படுகிறது. இந்த சாஃப் தொழில்நுட்பத்துடன் கூடிய ஜெட் விமானங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) தயாரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள டிஆர்டிஓ ஆய்வகத்தில் இவை தயாரிக்கப்பட்டிருக்கின்றன. சாஃப் தொழில்நுட்ப போர் விமானங்கள் பலகட்ட சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டதால், விமானப் படையில் இந்த தொழில்நுட்பம் தற்போது இணைக்கப்பட்டு வருவதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.