பட்ஜெட்டில் கல்வித்துறைக்கான முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ‘இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை முக்கியம். அவர்களின் கல்வி, திறன்கள், அறிவு ஆகியவற்றில் இருக்கும் நம்பிக்கையால் தன்னம்பிக்கை வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு அடுத்ததாக கல்வி, திறன், ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்புகளுக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையில் பாரத மொழிகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. நமது தேசத்தில் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இப்போது நாம் ஹைட்ரஜனை போக்குவரத்து எரிபொருளாகப் பயன்படுத்தத் தயாராகவே இருக்கிறோம். எதிர்கால பசுமை எரிபொருட்களில் முக்கியமானதாக ஹைட்ரஜன் கருதப்படுகிறது. பசுமை ஆற்றலில் தன்னிறைவு அடைவது அவசியம். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘ஹைட்ரஜன் மிஷன்’ ஒரு திருப்புமுனை தீர்மானம்’ என தெரிவித்தார்.