சக்தி இல்லையேல் சிவன் இல்லை என ஈசனுக்கு உணர்த்தியவள்! அழுத குழந்தைக்கு ஞானப்பால் வழங்கியவள்! பக்தனின் துயர் களைய காதணியை வீசி நிலவை உண்டாக்கியவள்! அசுரனை அழித்து மகிஷாசூரமர்தினியானவள்! அண்டியவருக்கு அருளை வாரி வழங்குபவள்!. இத்தனை போற்றுதலுக்கு உரிய சக்தியை வழிபடும் தினங்களாக அமைந்திருப்பது நவராத்திரி.
வட பாரதத்தின் பெரும்பாலான கோயில்களில் துர்க்கைக்கு பத்து நாட்களுக்கும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். மகாராஷ்டிராவில் புதிதாக தொழில் தொடங்குவது, புதிய பொருட்களை வாங்குவது போன்றவற்றை நவராத்ரி தருணத்தில் மேற்கொள்ளுவதை நற்பேற்றின் அடையாளமாகவே கருதுகிறார்கள்.
தசரா கொண்டாட்டத்தின் உச்சக்கட்டம் என்று சொன்னால் குஜராத் மாநிலம் தானோ என்று வியக்கும் அளவிற்கு அங்கு பக்தி பொங்கிய பூஜைகள், விரதங்கள், ஆட்டம், பாட்டம் என்று அதகளப்படும். அந்த மாநிலத்தின் பாரம்பரிய நடன மான கர்பா, தாண்டியாவை பெரிய திடல்களில் குழுவாக இணைந்து கலாச்சார ஆடை அணிந்து ஆடி மகிழ்வது அங்கு நாம் தேடிக்காண வேண்டிய கண்கொள்ளாக் காட்சி.
அது என்ன கர்பா நடனம்? துளைகளோடு இருக்கும் அழகிய வேலைப்பாடுள்ள மண்பானைக்குப் பெயர்தான் கர்பா. இந்த பானையின் உள்ளே தீபத்தை ஏற்றி வைத்து பெண்களும், ஆண்களும் சுற்றி நின்று ஆடுவதுதான் கார்பா நடனம். ஆடும் பொழுது துர்கையை போற்றி பாடுகிறார்கள். கார்பாவினுள் இருக்கும் ஜோதி இந்த ஜகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்தையும் காக்கும் சக்தியான துர்கையின் ரூபம் என்பது நம்பிக்கை.
நவராத்ரி முழுவதும் இந்த நடன கொண்டாட்டங்கள் தொடரும். குஜராத்தை போலவே பல வடமாநிலங்களிலும் கர்பா, தாண்டியா நடனங்கள் நவராத்ரியை சிறப்பாக்குகின்றன. திடல்கள் மட்டுமல்லாது தெருக்களிலும் வீடுகளிலும் கூட கர்பா நடனங்கள் களைகட்டும். ஒன்பது தினங்களும் விரதமிருந்து கோயிலுக்கு சென்று துர்க்கையை வணங்க வேண்டும் என்பது அவர்களின் பாரம்பரிய பழக்கம். குழந்தைகள் கூட விரதமிருந்து மூன்று தேவிகளை போல ஆடையணிந்து மேடைகளில் காட்சியளிப்பதை காண சில நேரங்களில் அந்த தேவியரே தரையிரங்கி வந்தனரோ என்பதுபோல் ஆன்மிக வெள்ளம் பெருகியிருக்கும்.
நான்காம் நாள்: நவராத்திரி நான்காம் நாளுக்கு உரியவளாக கூஷ்மாண்டா இருக்கிறாள் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. கூஷ்மாண்டா என்றால் அகிலத்தைப் படைத்தவள் என்று அர்த்தம். அஷ்டபுஜம் கொண்ட இவளின் வாகனம் சிம்மம். தாமரை, வில், அம்பு, ஜபமாலை, கமண்டலம், சக்கரம், தண்டாயுதம், அதிர்ஷ்ட கலசம் தாங்கியவளாக இருக்கிறாள். கூஷ்மாண்டாவின் கரத்தில் இருக்கும் அதிர்ஷ்ட கலசம் நவ நிதியும் அஷ்ட ஸித்தியும் நமக்கு நல்கக் கூடியது. நம் உடலில் அனாஹத சக்கரத்தில் அமர்ந்து ஆற்றலை அளிக்கும் அளவில்லாத பேரழகும் ஆற்றலும் கொண்ட இந்த தேவியை வழிபட நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை களைந்து, இகபர இன்பத்தை அளிக்கக் கூடியவள். வணங்குவோர்க்கு உற்சாகமும் ஆற்றலும் பிறக்கிறது என்றால் வேறென்ன வேண்டும்?. இந்த நவராத்திரி நான்காம் நாளில் வைஷ்ணவி, மகா கௌரி வடிவங்களிலும் அன்னை மகாலட்சுமியை வழிபடும் வழக்கம் நாட்டின் சில பகுதிகளில் உள்ளது.
ஆர். கிருஷ்ணமூர்த்தி