தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், அனைத்துபொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘நடப்பு கல்வியாண்டுக்கான ‘தேசிய கல்வி உதவித்தொகை’க்கான இணையதளம் (என்.எஸ்.பி) விரைவில் திறக்கப்பட உள்ளது. அதில், சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயனாளர்களை தேர்வு செய்வதில் நடக்கும் மோசடிகளைத் தவிர்க்க, மாணவர்களின் சுய விவரங்களை ஆதார் எண்ணுடன் ஒப்பிட்டு, மின்னணு முறையில் சரிபார்க்கும் முறையை மத்திய சிறுபான்மையின நலஅமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. எனவே, அனைத்து கல்வி நிறுவனங்களும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் ஆதார் விவரங்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி, மாணவர்களின் ஆதார் விவரங்களை விரைவாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 62 ஆயிரம் மாணவ மாணவிகள் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.