ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கார்க், தவுசா ஆகிய மாவட்டங்களில் அமைய உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி அங்கு பெட்ரோ கெமிக்கல் தொழில்நுட்ப மையத்தையும் திறந்து வைத்தார். அப்போது பேசுகையில், ‘உலக நாடுகளுக்கு சுகாதாரத்துறையில் கொரோனா பெருந்தொற்று பல்வேறு பாடங்களை கற்று கொடுத்துள்ளது. அனைத்து நாடுகளும் தங்களது வழியில் இப்பிரச்னையை சமாளித்து வருகின்றன. இந்நேரத்தில், சுகாதாரத்துரையில் பாரதம் தனது பலத்தையும், தன்னிறைவை எட்டுவதற்கு தீர்மானம் செய்துள்ளது. நமது சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த புதிய தேசிய சுகாதார கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. தூய்மை பாரதம், ஆயுஷ்மான் பாரத், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் ஆகியவை இதன் அங்கம். சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம், தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சுகாதார சேவை அனைவருக்கும் கிடைக்க செய்யும்’ என்று பேசினார்.