நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த ஓராண்டாக மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் ‘சுதந்திரம் 75’ சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தன்று தேசம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் கொடியேற்ற மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து, புதுச்சேயில் ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை அரசு அலுவலகம், வீடுகளில் கொடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான துண்டு பிரசுரங்களை முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டார். அப்போது அவர், “மக்களுக்கு நாடுப்பற்றை ஊட்ட நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நிகழ்வுகள் நடக்கின்றன. இளையோருக்கு தேசபற்று உருவாக வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணம். புதுச்சேரியிலும் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி வரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை பறக்கவிட வேண்டும். இதை செயல்படுத்த பல்வேறு துறைகள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கான தேசியக் கொடிகளை அரசு கொள்முதல் செய்து அங்கன்வாடி, பாண்லே பாலகங்கள் வாயிலாக குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஒவ்வொருவரும் தேசியக்கொடியை விலை கொடுத்து வாங்கி வீட்டில் ஏற்றவேண்டும். நாம் அனைவரும் தேசியக்கொடியை ஏற்றவேண்டும் என்ற செய்தி மக்களிடம் சென்று சேர்க்க புதுவையில் ஆயிரத்து 80 இடங்களில் 62 வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொருவரும் மூன்று நாட்கள் தேசியக்கொடி ஏற்றி வைக்கவேண்டும். பேருந்துகளிலும் வண்ணங்களையும் தீட்ட உள்ளோம். காசு கொடுத்து வாங்கி கொடி ஏற்றினால் பற்று அதிகம்” என்று கூறினார். இந்நிகழ்வில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.