மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள ‘குளோபல் ஸ்ட்ரேட்டஜிஸ் ஃபௌண்டேஷன்’ என்ற அறக்கட்டளை, ‘தேசமே முதலில் தேசமே உயர்வானது’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
அதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், ‘ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒரே வம்சாவளியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எனவே, ஒவ்வொரு பாரத குடிமகனும் அடிப்படையில் ஒரு ஹிந்துதான். இஸ்லாம் என்பது பாரதத்தில் படையெடுப்பாளர்களால் வந்தது. இது வரலாறு.
நமது நாட்டில் முஸ்லிம்கள் பயப்பட ஒன்றுமில்லை. ஹிந்துக்கள் யாருடனும் பகை கொள்வதில்லை. பாரதம் உலகின் வல்லரசாக இருக்கும். ஆனால் அது ஆயுத பலத்தால் அல்ல, விஷ்வ குரு வடிவத்தில் இருக்கும். எங்களைப் பொறுத்தவரை, ஹிந்து என்ற சொல், நம் தாய்நாடு, மூதாதையர்கள், கலாச்சாரத்தால் நமக்கு வழங்கப்பட்ட வளமான பாரம்பரியத்தை சேர்ந்தது. எனவே, இச்சூழலில் ஒவ்வொரு பாரதத்தவரும் எங்களுக்கு ஹிந்துவே. விவேகமான முஸ்லீம் தலைவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்க்க வேண்டும். அடிப்படைவாதிகளுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும். இதை நாம் எவ்வளவு விரைவாகச் செய்கிறோமோ, அவ்வளவு குறைவான சேதத்தை நமது சமூகம் சந்திக்கும்.
தேசத்தை உடைக்க நினைப்பவர்கள்தான் ‘நாங்கள் ஒன்றல்ல, நாங்கள் தனித்தவர்கள்’ என்று சொல்கின்றனர். நாம் ஒருபோதும் அதற்கு இரையாகிவிடக் கூடாது. நாம் ஒரே நாட்டினர். நாம் ஒரே தேசமாக ஒற்றுமையாக இருப்போம். இதுதான் நாம். இதையே ஆர்எஸ்எஸ் நினைக்கிறது, இதை உங்களுக்கு தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன்’ என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன் (ஓய்வு) – காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பேசுகையில், ‘ஒரு வளமான சமுதாயத்திற்கு பன்முகத்தன்மை அவசியம், பன்முகத்தன்மை பாதுகாக்கப்படும் சமூகங்கள் செழித்து வளர்ந்துள்ளது. சனாதன கலாச்சாரம் யாரையும் வித்தியாசமாக கருதுவதில்லை, ஏனெனில் இந்த கலாச்சாரத்தில், உயிர் உள்ளவற்றிலும் உயிரற்றதிலும் தெய்வீகமே உணரப்படுகிறது.’ என்றார். லெப்டினன்ட் ஜெனரல் ஹஸ்னைன், பாரத முஸ்லிம்களை குறிவைக்கும் பாகிஸ்தானை கடுமையாக சாடினார், பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடிக்குமாறு முஸ்லீம் அறிவுஜீவிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.