மோடிக்கு முஸ்லிம் பெண்கள் பாராட்டு

டெல்லியில் உள்ள ஹரியானா பவனில் முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்.ஆர்.எம்) மகிளா பிரகோஷ்த் தலைமையில் நாடு முழுவதிலும் இருந்து வந்த சுமார் நூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் இதில் பங்கேற்றனர். மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவரும், முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் புரவலருமான இந்திரேஷ் குமார் இதில் கலந்துகொண்டு பேசுகையில், ‘பெண் குழந்தைகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் முடிவை மோடி அரசு எடுத்துள்ளது. ஏற்கனவே பெண்களுக்கு எதிரான முத்தலாக் தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், முத்தலாக் விவகாரத்தில் சில அரசியல்வாதிகள் முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றனர்’ என கூறினார். இக்கூட்டத்தில், எம்.ஆர்.எம் மகிளா பிரகோஷ்த் புரவலர் ரேஷ்மா உசேன், தேசிய அமைப்பாளர்கள் ஷானாஸ் அப்சல், ஷாலினி அலி, எம்.ஆர்.எம் தேசிய ஒருங்கிணைப்பாளர் முகமது. அஃப்சல் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களின் நலன், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘தஸ்தான் இ யோகி’ என்ற உருது மொழி புத்தகத்தை இந்திரேஷ் குமார் வெளியிட்டார். 2017ல் சாந்தனு குப்தா எழுதிய ‘The Monk who become Chief Minister’ என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. மேலும், இக்கூட்டத்தில், முத்தலாக் வேதனையில் இருந்து தங்களை விடுவித்ததற்காகவும் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்திய நடவடிக்கைக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.