விநாயகர் சதுர்த்தி நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வழக்கம்போல, தி.மு.க அரசின் முதல்வர் ஸ்டாலின் இதற்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்றாலும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் அதன் டுவிட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க எம்.பி செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த டுவீட்டை மேற்கோளிட்டு டுவீட் செய்துள்ள செந்தில்குமார், ஹிந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான் எனவும் கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல எனவும் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். சரி, அப்படியெனில், ஹிந்து கோயில்களை நிர்வகிப்பது மட்டும்தான் ஹிந்து சமய அறநிலையத்துறையின் பணி என்றால், கோயில் அர்ச்சகர் நியமனத்தில் அரசு தலையிடுவது ஏன், உண்டியல் பணத்தை எடுத்து மற்ற விஷயங்களுக்கு செலவிடுவது ஏன், கோயில் நிலத்தில் அரசு கட்டடங்களை கட்டவும், சாமிக்கு பக்தர்கள் கணிக்கையாக கொடுத்த தங்க நகைகளை உருக்கவும் இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது, நிர்வகிப்பது தான் பணியென்றால் களவாடப்பட்ட கோயில் நிலங்களை மீட்பது, வாடகை, குத்தகை வசூலிப்பு போன்ற பணிகளில் சுணக்கம் ஏன்? என மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். அரசு விழாவில் பல ஆண்டுகளாக பாரம்பரியமாக நடத்தப்படும் ஹிந்துமத முறைப்படியான பூஜைகள் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையில் சிக்கியவர்தான் இந்த தி.மு.க எம்.பி செந்தில்குமார் என்பது நினைவு கூரத்தக்கது.