கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம் பாவகடாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ வெங்கடரமணப்பா, தாசில்தார் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டபிறகு தனது காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், எம்.எல்.ஏவை அணுகி தனது கிராமத்தில் உள்ள சாலைகள் மோசமான நிலையில் உள்ளது, அவற்றை சீரமைக்க வேண்டும், தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என எடுத்துரைத்தார். இளைஞரின் கோரிக்கையால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., இளைஞரை அறைந்தார். மேலும், அந்த இளைஞரை சிறையில் அடைப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. வெங்கடரமணப்பாவின் பொறுப்பற்ற செய்கையை பா.ஜ.க விமர்சித்துள்ளது. எனினும், இச்சம்பவத்திற்காக இளைஞரிடம் மன்னிப்பு கேட்க காங்கிரஸ் எம்.எல்.ஏ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.