நீதிபதிகளை அவமதிக்கும் அமைச்சர்

திருச்சி மரக்கடைப் பகுதியில் தி.க சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக அமைச்சர் கே என் நேரு, நீட் தேர்வு குறித்து பேசுகையில், நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வில் 2 நீதிபதிகள் நீட்டிற்கு எதிராக தீர்ப்பளித்தனர். ஒரு நீதிபதி மட்டும் ஆதரவாக தீர்ப்பளித்தார். அந்த ஒரு நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் அமர்வை ஏற்படுத்தி தங்களுக்கு சாதகமாக நீட் தேர்வை மத்திய அரசு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டினார்.

தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் நீட் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை மறைத்து தி.மு.க நாடகமாடி வருகிறது. தற்போது தி.மு.க அமைச்சர் ஒருவரே, நீதிபதிகள் மத்திய அரசிடம் விலை போய்விட்டதாக குற்றம் சாட்டுவது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு செயல். இவர் மீது மத்திய மாநில அரசுகளும், உச்ச நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவரின் கூற்றுப்படி, நீதிபதிகள் மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார்கள் எனில், கடந்த 7 ஆண்டுகளில் எத்தனையோ வழக்குகளில் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதே? அவர்கள் மத்திய அரசிடம் விலை போகவில்லையா அல்லது எதிர்கட்சிகளிடம் விலை போய்விட்டதாக நேரு கூறுகிறாரா? தாங்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதும் தற்போது மாநிலத்தில் ஆட்சியில் உள்ளபோதும் நீதிபதிகள் இப்படித்தான் நடந்துகொண்டதாக கே.என். நேரு கூறுகிறாரா? என பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர்.