பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவிக்கும் வகையில், 2022 – 23 சந்தைப்படுத்துதல் காலத்திற்கான காரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்ய இது உதவும். இதன்படி ஒரு குவிண்டால் நெல்லின் தற்போதைய விலையான ரூ. 1940ல் இருந்து ரூ. 2040 ஆகவும், “ஏ” கிரேடு நெல் ரகங்கள் விலை ரூ.1960ல் இருந்து ரூ. 2060 ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கேழ்வரகு விலை குவிண்டாலுக்கு ரூ. 3,578 ஆகவும், சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.1,962 ஆகவும், பயத்தம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூ. 7,755 ஆகவும், உளுத்தம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூ. 6,600 ஆகவும், நிலக்கடலையின் விலை குவிண்டாலுக்கு ரூ. 5,850 ஆகவும், சூரியகாந்தி விதையின் விலை குவிண்டாலுக்கு ரூ. 6,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.