மினி கிளினிக் மூடல்

அம்மா மினி கிளினிக் ஓராண்டு மட்டுமே செயல்படும்படி கடந்த அ.தி.மு.க ஆட்சி அமைத்திருந்தது. தற்போது இதன் தேவை ஏற்படவில்லை. எனவே அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, “ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த தி.மு.க அரசால் மூடப்படுகிறது. இந்த அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை தி.மு.க அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.