ஊடக வழிகாட்டுதல்கள்

ஊடக அங்கீகாரங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின் படி, ஊடகத்தின் பத்திரிகையாளர், நிருபர் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு, பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு பாதகமான முறையில் செயல்பட்டால், குற்றம் சாட்டப்பட்டால் அவர் பணி புரியும் ஊடகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அல்லது இடைநீக்கம் செய்யப்படும்.  கண்ணிய குறைவு, நெறிக்கு முரணாக செயல்படுவது, நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு, அல்லது குற்றத்திற்கு தூண்டுதல் போன்ற பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் ஊடகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அல்லது இடைநீக்கம் செய்யப்படும். டிஜிட்டல் ஊடகங்களுக்கு அதன் ஆசிரியர் பாரத தேசத்தவராக இருக்க வேண்டும். இணையதளம் குறைந்தது ஒரு வருடமாவது தொடர்ந்து இயங்கியிருக்க வேண்டும். அவற்றின் அலுவலகம் பாரதத்தில் இருக்க வேண்டும். நிருபர்கள் டெல்லியில் இருக்க வேண்டும். வெளிநாட்டு செய்தி ஊடகங்களில் பணிபுரியும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது. அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் பொது, சமூக ஊடக சுயவிவரம், விசிட்டிங் கார்டுகள், லெட்டர் பேடுகள் உள்ளிட்ட எந்தப் படிவத்திலும், படைப்புகளிலும் “இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது போன்ற வழிகாட்டுதல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.