அரசு பணியில் உள்ள பெண்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 1980ம் ஆண்டு முதல் 90 நாட்களாக இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை கடந்த 2011ல் 6 மாதங்களாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார். பின்னர் அதனை 9 மாதங்களாக உயர்த்தி 2016ம் ஆண்டு அறிவித்தார். இந்த பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று தி.மு.க அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், தற்காலிக பணியாளர்களுக்கும் 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்த அரசாணையை அமல்படுத்தக்கோரி வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக தமிழக அரசு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.