மத்திய அரசுக்கு அமோக ஆதரவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க அரசு பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ஆளும் பா.ஜ.கவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இப்போதே பிரச்சாரப் பணீகளை முன்னெடுத்துள்ளன. இந்த சூழலில் மக்களின் தற்பதைய மனநிலை குறித்து இந்தியா டுடே, சி வோட்டர் சார்பில் தேசிய அளவில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 67 சதவீத மக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 18 சதவீதம் பேர் மட்டுமே மத்திய அரசு குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக 72 சதவீதத்தினர் ஆத்ரவு தெரிவித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பாரதத்தின் பொருளாதார வளர்ச்சியை மத்திய அரசு உறுதி செய்துள்ளதற்கும் சீனாவின் அச்சுறுத்தல்களை அரசு திறம்பட எதிர்கொண்டுள்ளதற்கும் பெரும்பாலான மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். அயோத்தியில் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோயில் கட்டப்படுவது பா.ஜ.க அரசின் மிகப்பெரிய சாதனை என்று புகழ்ந்துள்ளனர். காஷ்மீரை பாரதத்தில் இருந்து ஒதுக்கி வைத்திருந்த சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதற்கும் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முக்கியமாக பாரதத்துக்கு தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டம் அவசியமா என்ற கேள்விக்கு 69 சதவீதம் பேர் அவசியம் என்று பதில் அளித்துள்ளனர். வெறும் 19 சதவீதம் பேர் மட்டுமே பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல ஹிஜாபுக்கு தடை விதிப்பது சரியா என்ற கேள்விக்கு 57 சதவீதம் பேர் சரி என்றும் 26 சதவீதம் பேர் தவறு என்றும் பதில் அளித்துள்ளனர். தற்போது தேசமெங்கும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு குறித்த கேள்வியும் இதில் கட்கப்பட்டது. உச்ச நீதிமன்றமே, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது சரியா என்ற கேள்விக்கு 38 சதவீதம் பேர் சரி என்று பதில் அளித்துள்ளனர். அரசு நிர்வாகம் தான், நீதிபதிகளை நியமிக்கவேண்டும் என்று 19 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். அரசு மற்றும் நீதித்துறை இணைந்து நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று 31 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்தனர்.