திண்டிவனத்தில் இருந்த ஒரு பள்ளிக்கு முன்னால் வயதான பெண்மணி ஒருவர் நெல்லிக்காய் கடை வைத்திருந்தாள். அவளது சேவையால் கவரப்பட்ட சுவாமிநாதன் என்ற பள்ளி மாணவன் தனது நண்பர்களை அவளது கடைக்கு வாடிக்கையாளராக்கினான். பலரை அவ்வாறு அறிமுகப்படுத்தியதால், அவன் கிழவியிடம் சில பழங்களை சலுகையாக எதிர்பார்த்தான். ஆனால் கிழவி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. சுவாமிநாதனும் விடாமல், “இதோ பார் பாட்டி! எனக்கு கமிஷன் பழம் தரலைன்னா நான் அப்புறம் கடை பக்கம் வர மாட்டேன்” என்று மிரட்டினான். கிழவிக்கு வந்ததே கோபம்! “இனிமேல் என் கடை பக்கம் வராதேடா. உன்னை ஒண்ணும் பூரண கும்பம் வச்சி யாரும் கூப்பிடலை” என்று சிறுவனை விரட்டியடித்தாள். சுவாமிநாதனும், “நீங்க கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன்” என்றான்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு திண்டிவனத்திற்கு ஒரு இளம் துறவி வருவதாகத் தகவல் கிடைத்தது. அவரை வரவேற்க ஊர் மக்கள் பலர் தங்கள் வீடுகளுக்கு முன்னால் பூரண கும்பத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் கிழவியும் அவ்வாறே நின்றிருந்தாள். அந்தத் துறவி வேறு யாருமல்ல, கிழவியிடம் சண்டை போட்ட சிறுவன்தான்.
இளம் துறவி பலரிடம் பூரண கும்ப மரியாதையை வாங்கி கொண்டு கிழவியின் முன்னால் வந்து நின்றார். அவளும் பூரண கும்பம் கொடுத்து மரியாதை செய்தாள். இளம் துறவி கிழவியைப் பார்த்து, “என்ன பாட்டி! நீங்க கும்பம் தந்து கூப்பிலைன்னு சொன்னீங்க. நானும் வாங்க மாட்டேன்னு சொன்னேன். ஆனா இப்ப ரெண்டும் நடந்துடுச்சு. பார்த்தியா” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள். கிழவியின் முகத்தில் ஆனந்த கண்ணீர் வடிந்தது. அந்த இளம் துறவிதான், பிற்காலத்தில் காஞ்சி மகா சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட ஜகத்குருஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.