அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் துறவு வாழ்க்கையை விரும்பி ஏற்றவர் வர்த்தமானர். இவர் ஒருநாள் தனது செல்வத்தையெல்லாம் தானம் கொடுத்துவிட்டு இந்திரன் கொடுத்த ஒரு ஆடையை அணிந்திருந்தார். ஓரிடத்தில் அமர்ந்து தவ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த போது ஒருநாள் சோமதத்தன் என்பவன் அவரிடம் வந்து தனக்கு எதையாவது கொடுக்குமாறு தானம் கேட்டார். உடனே அவர் எதுவும் கையில் இல்லாத நிலையில் தான் உடுத்தியிருந்த ஆடையை இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை அவனிடம் கொடுத்துவிட்டு மறுபாதியை தான் கட்டிக்கொண்டார். அந்த ஆடையும் நழுவி கீழே விழுந்தது.
பாதி ஆடையை பெற்றுக்கொண்ட சோமதத்தன் அதனை பக்கத்து ஊரில் உள்ள வியாபாரியிடம் கொடுத்து ஏதாவது கொடு என்றார். அதனைப் பெற்றதும் ஒரு தெய்வீகத் தன்மை சூழ்வதைக் கண்ட வியாபாரி அவனிடம் நூறு பொற்காசுகள் தருவதாகவும் மீதம் உள்ள பாதியையும் கொண்டுவந்து தந்தால் 300 பொற்காசு தருவதாகவும் சொன்னான். உடனே சோமதத்தன் வர்த்தமானர் தவமிருந்த பகுதிக்கு வந்து அவருக்குத் தெரியாமலேயே மீதம் உள்ள ஆடையையும் எடுத்துச்சென்று வியாபாரியிடம் கொடுத்துவிட்டான்.
இதைக் கண்ட வர்த்தமானர் கிழிந்த ஒரு கந்தல் துணிகூட ஒருவனை திருடனாக்க துணியுமானால் இனி அந்த ஆடையும் தனக்குத் தேவையில்லை என்று வாழ்நால் முழுவதும் திகம்பரராக (நிர்வாணமாக) இருக்க முடிவெடுத்தார். உயர்ந்த எண்ணத்தின் காரணமாக நிர்வாண நிலையை அடைந்த அவரே மகாவீரர் என்று அழைக்கப்படுகிறார்.