பூதான இயக்கத்தின் மூலம் நாடெங்கும் நிலமற்ற விவசாயிகளுக்கு பல்வேறு ஜமின்தார்கள், பண்ணையார்களிடம் இருந்து நிலத்தை தானமாக பெற்று ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வந்தவர் ஆச்சார்ய வினோபா பாவே. ஒருசமயம் தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத் பகுதியில் குடும்பங்களில் வறுமை, காரணமாக தினசரி சண்டை, சச்சரவுகளும் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. இப்பகுதிக்கு அவர் வந்தபோது கிராமத்தினர் கூடி வரவேற்றார்கள்.
அவர்களிடம் வினோபா, “உங்கள் பிரச்சனை என்ன? ஏன் தினசரி குடும்பத்தில் குழப்பம் உண்டாக்குகிறீர்கள்?” என்று கேட்டார். “பயிர் செய்ய எங்களுக்கு நிலம் இல்லை, அது கிடைத்துவிட்டால் அனைவரும் உழைப்பை நோக்கிச் சென்றுவிடுவோம். சண்டை சச்சரவுகள் தாமாக அடங்கிவிடும்” என்றனர். வினோபா “விவசாய பணிக்கு உங்களுக்கு எவ்வளவு நிலம் தேவைப்படும்?” எனக் கேட்டார்.
“நாங்கள் அனைவரும் உழைத்துச் சாப்பிட குறைந்தது 80 ஏக்கர் நிலம் தேவை” என்றார் கிராமத்து பெரியவர். வினோபா அவரிடம், “நீங்கள் அனைவரும் இதனை விண்ணப்பமாக கையொப்பமிட்டு தாருங்கள்” என்றார். அவர்களும் அப்படியே செய்து கொடுத்தார்கள். ஏழை விவசாய மக்களிடமிருந்து மனுவை பெற்றுக்கொண்ட வினோபா, அங்கு குழுமியிருந்த நிலக்கிழார்களைப் பார்த்து, “இந்த ஏழை மக்களுக்கு உங்களில் யாராலும் 80 ஏக்கர் நிலம் கொடுக்க முடியுமா?” என கேள்வியெழுப்பினார்.
அக்கூட்டத்திலிருந்து ஒரு தர்மவான் எழுந்து நின்று, “நான் கொடுக்கிறேன் 100 ஏக்கர் நிலம்” என்று கூறினார். இதைக் கேட்ட கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் “இந்த அளவுக்கு ஏழையின் மீது அன்பும் கனிவும் கொண்ட ஒரு நெஞ்சம் நம்ம ஊரிலும் இருக்கிறதா?” என எண்ணி மகிழ்ந்தனர். அவரை மகிழ்வுடன் மனதார வாழ்த்தினர்.