திபெத்தை ஆக்கிரமித்த சீனா, 1956 ல் லத்தாக் பிரதேசத்தின் அக்சாய் சின் பகுதியில் அத்துமீறி நுழைந்தது. பாங்கொக் ஏரியின் வடக்கே மேஜர் தான் சிங் தாப்பா தலைமையிலான 28 பேரைக் கொண்ட (டி கம்பெனி) குழு 48 ச.கி.மீ. பரப்பளவைப் பாதுகாத்து வந்தனர். ஸ்ரீஜாப் ராணுவநிலையைச் சுற்றி 3 ராணுவ நிலைகளை அமைத்திருந்த சீன ராணுவம் அக்டோபர் 20 அதிகாலை நம் மீது தொடர்ச்சியாகத் தாக்கியது.
ஆபத்தை உணர்ந்த கூர்க்கா வீரர்கள், திருப்பித் தாக்கியதில், சீன படையினர் பலர் கொல்லப்பட்டனர். நமது தரப்பிலும் பலர் பலியானார்கள், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேஜர் தாப்பா, சுபேதார் மின் பஹதூர் குருங் இருவரும் ஒருங்கிணைந்து தாக்குதலைத் திட்டமிட்டு, படையினரை உற்சாகப்படுத்தினார்கள்.
நமது ராணுவ நிலைக்கு மிக அருகில் 41 மீட்டர் இடைவெளியில் நெருங்கிய சீன ராணுவம் நெருப்புக் குண்டுகளை வீசித் தாக்கியது. பாரத வீரர்கள் அளித்த பதிலடியில், சீன ராணுவத்தினர் கொல்லப்பட்ட. சண்டையில் மின் சுபேதார் பகதூர் பலியானார், கூர்க்கா வீரர்கள் ஏழு பேர் மட்டுமே எஞ்சினர். சீன ராணுவம் ஏரிப் பகுதியில் இருந்தும் தாக்கத் தொடங்கியது. மீட்புக் குழுவோடு வந்த ஒரு படகு முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
வெடிமருந்துகளும் துப்பாக்கிகளும் தீர்ந்து விட்ட போதிலும் கூர்க்கா வீரர்கள் மூவரும் பதுங்கு குழியில் இருந்து வெளியேறி முடிந்தவரை சீனப் படையினரைக் கத்திகளால் குத்திக் கொன்றனர். ஆனாலும் சீனப் படையால் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களில் துளசிராம் தாப்பா மட்டும் சாதுரியமாகத் தப்பினார். பதுங்கு குழியில் வெடிகுண்டுத் தாக்குதலில் தப்பிய மேஜர் தான் சிங் தாப்பா பிணைக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட விவரம் பிறகு தான் தெரியவந்தது.
சர்வதேசப் போர்முறைகளை மீறி சீன ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்ட மேஜர் தாப்பா நவம்பரில் விடுவிக்கப்பட்டார். அவரை பாராட்டி மத்திய அரசு பரம்வீர் சக்ரா விருது வழங்கிக் கௌரவித்தது..
– கரிகாலன்