மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், தஞ்சாவூர் அருகே, களிமேடு கிராமத்தில் தேர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். அங்குள்ள அப்பர் மடத்துக்கு சென்ற அவர், பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம், 500 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மதச்சார்பற்ற நாடு என சொல்லிக் கொண்டு, ஒரு மதத்தை மட்டும் கட்டுப்படுத்துவது ஏன்? ஹிந்து சமயத்தை ஆங்கிலேயர்களாலேயே அழிக்க முடியாத போது இவர்கள் என்ன செய்து விட முடியும்? இதையெல்லாம், கடவுள் பார்த்துக் கொள்வார். மதுரை ஆதீன கோயில்களின் இடங்களை குத்தகைக்கு வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்கின்றனர். சட்டசபையில், கோயில் திருப்பணி செய்யுமாறு கூறுகின்றனர். குத்தகையை கொடுத்தால் தானே திருப்பணி செய்ய முடியும்? குத்தகையும் கொடுப்பதில்லை, கோயில் இடத்தில் வீடு கட்டிக் கொண்டு வாடகையும் கொடுப்பதில்லை. இதை கேட்டால் அடிப்பேன் என மிரட்டுகின்றனர். இதில் அனைத்து அரசியல் கட்சியினரும் உள்ளனர். இதில் இன்றைய ஆளுங்கட்சியினர் தான் அதிகம். ஆளும்கட்சியினரால் என் உயிருக்கு ஆபத்து என்றால், பிரதமரையும், மத்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்து பேசுவேன்’ என்று கூறினார்.