அமைதியை ஆதரிக்கும் மதரசா

உத்தரபிரதேசத்தில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான தியோபந்த் மதரசா, மக்காவிற்குப் பிறகு இஸ்லாமியக் கல்வியின் மிக உயர்ந்த இடமாக உலகப் புகழ் பெற்றது. இந்த மதரசா தற்போது வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக சில அரசியல் கட்சிகளால் வேண்டுமென்றே பரப்பப்படும் மதவெறி மற்றும் வெறுப்பு பிரச்சார சூழலுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது. அரசியல் இல்லாத, கலவரம் இல்லாத, பயங்கரவாதம் இல்லாத அமைதியான பாரதத்தின் அவசியத்தை இந்த மதரசா வலியுறுத்தி உள்ளது.

இங்கு, தேசிய சிந்தனையுடன் முஸ்லிம்களின் வளர்ச்சிக்கு பாடுபடும் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்.ஆர்.எம்) இங்கு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பல முக்கிய முஸ்லிம் மதகுருமார்கள், புத்திஜீவிகள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் இதனை வலியுறுத்தினர்.

இதில் பங்கேற்றவர்கள், ஒருமனதாக ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுதான். நாங்கள் ஒன்றாகவே இருப்போம் என தெரிவித்தனர். வெறுப்பைப் பரப்புபவர்கள், மதவெறியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

இக்கூட்டத்தில் பேசிய பலர், ‘மத்திய அரசு எந்தவொரு சமூகத்தினருக்கும் அல்லது பிரிவினருக்கும் பாரபட்சம் காட்டவில்லை. சிறந்த கல்வி, சுகாதாரம், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அரவணைத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இரு சமூகங்களும் பரஸ்பரத் தொடர்பை அதிகரிக்க வேண்டும், அதனால் பல ஆண்டுகளாக உருவாகியுள்ள தவறான புரிதலை அகற்ற முடியும். சமூகத்தில் 2 சதவீதம் பேர் மட்டுமே ஹிந்து முஸ்லிம் பிரிவினையில் குளிர் காய்கின்றனர். டிவி சேனல்களில் பல போலி மௌலானாக்களும் உலமாக்களும் பேசி விஷத்தைப் பரப்புகிறார்கள்.

இளைஞர்களின் வளர்ச்சிகாக சுயதொழில் மையங்கள், கடன் வசதிகள், திறன் மேம்பாடு என பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. அனைத்து மதங்கள், சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வித பாகுபாடுமின்றி இத்திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மக்கள் தவறாக வழிநடத்தப்படாமல், திருப்திப்படுத்தும் அரசியல் செய்யாத அரசையும் கட்சியையும் ஆதரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதனால், அனைவருக்கும் சமமான வளர்ச்சியும் நம்பிக்கையின் பாதையும் கிடைக்கும்’ என பேசினர். முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச்சின் லட்சிய நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாக இக்கூட்டம் கருதப்படுகிறது.