பாரதத்தின் பின்னால் அணி திரள்வோம்

பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் மூன்றாவது பாரதம் பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு (எப்.ஐ.பி.ஐ.சி) உச்சி மாநாட்டில் உரையாற்றும் போது, பிரதமர் மோடியிடம், ரஷ்யா உக்ரைன் போரால் பசிபிக் தீவு நாடுகள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை எடுத்துரைத்தார். பசிபிக் தீவு நாடுகள், பல சிறிய நாடுகள் மீது தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய பணவீக்க அழுத்தத்தை சுட்டிக்காட்டினார். “உங்கள் முன் அமர்ந்திருக்கும் இந்த நாடுகள் தங்கள் நாடுகளில் அதிக எரிபொருள் மற்றும் மின் கட்டண அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளன, மேலும் புவிசார் அரசியல் மற்றும் அங்குள்ள அதிகாரப் போராட்டங்களின் அடிப்படையில் பெரிய நாடுகள் விளையாடுவதால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம்” என கூறிய அவர், பசிபிக் தீவு நாடுகள் அனைத்தும், பாரதப் பிரதமர் மோடியை உலகளாவிய தெற்கின் தலைவராக கருதுவதாகவும், சர்வதேச மன்றங்களில் பாரதத்தின் தலைமைக்கு பின்னால் நாங்கள் அனைவரும் அணி திரள்வோம் என்றும் கூறினார்.

ஜி 20 மற்றும் ஜி 7 போன்ற உலகளாவிய மன்றங்களில் சிறிய தீவு நாடுகளுக்காக தீவிரமாக குரல் கொடுக்க பிரதமர் மோடியை அவர் வலியுறுத்திய அவர், “வளர்ந்த பொருளாதாரங்கள், வர்த்தகம், புவிசார் அரசியல் தொடர்பான விஷயங்களை விவாதிக்கும் போது எங்கள் பிரச்சினைகளை மிக உயர்ந்த அளவில் வழங்கக்கூடிய குரல் நீங்கள் தான். நான் இணைத் தலைவராக இருக்கும் இந்த தருணத்தைப் பயன்படுத்தி நான் உங்களிடம் இதனை கேட்டுக்கொள்கிறேன். மேலும் நான் பசிபிக் பகுதியில் உள்ள எனது சிறிய சகோதர நாடுகளுக்காகவும் இதனைப் பேசுகிறேன். எங்களது நிலம் சிறியதாக இருந்தாலும், எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும், பசிபிக் பகுதியில் எங்களது பரப்பளவும் இடமும் பெரியது. வர்த்தகம் மற்றும் இயக்கத்திற்காக உலகம் எங்களை பயன்படுத்துகின்றன. பாரதம் மற்றும் பசிபிக் இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என்று நம்புகிறேன். எங்கள் தலைவர்கள் உங்களிடம் பேசுவதற்கு ஒரு தருணம் கிடைக்கும். அப்போது நீங்கள் அவற்றைக் கேட்க சிறிது நேரத்தை செலவிட வேண்டும். உலக அரங்கில் பசிபிக் தீவு நாடுகளுக்கான வக்கீலாக நீங்கள் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று பிரதமர் மோடியை வலியுறுத்தினார். “இந்த ஆண்டு ஜி20 மாநாட்டை நீங்கள் நடத்தும் போது, உலகளாவிய தெற்கு தொடர்பான பிரச்சனைகளில் வாதிடுவீர்கள் என்று இருதரப்பு கூட்டத்தில் எனக்கு உறுதியளித்ததற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனா தொற்றுநோயின் தாக்கம் உலகளாவிய தெற்கின் நாடுகளில் அதிகமாக இருந்தது. பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள், பசி, வறுமை மற்றும் உடல்நலம் தொடர்பான சவால்கள் ஏற்கனவே இருக்கின்றன. இப்போது புதிய பிரச்சனைகள் எழுகின்றன. இக்கட்டான காலங்களில் பாரதம் தனது நட்பு பசிபிக் தீவு நாடுகளுக்கு ஆதரவாக நின்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் ஏற்படுகின்றன. மேலும் உலகளாவிய நெருக்கடியால் உலகளாவிய தெற்கின் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐ.நா சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்தேன். இன்று எரிபொருள், உணவு, உரம் மற்றும் மருந்து விநியோகச் சங்கிலியில் இடையூறு ஏற்படுவதைக் காண்கிறோம். நாங்கள் நம்பியவர்கள், தேவைப்படும்போது எங்களுடன் நிற்கவில்லை… பாரதம் தனது ஜி 20 தலைமை மூலம் உலக தெற்கின் அபிலாஷைகளை உலகின் முன்பாக வைக்கும். தற்போது நடந்த ஜி 7 அவுட்ரீச் உச்சிமாநாட்டில் இதில் தான் எனது கவனம் இருந்தது” என்று கூறினார்.

முன்னதாக, ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு பிரதமர் மோடி பப்புவா நியூ கினியாவிற்கு சென்றபோது அந்நாட்டின் பிரதமரான ஜேம்ஸ் மாரப், பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்றார். பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.