இசையோடு இணைவோம்

இசை  என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலி. இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும்  இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் சாதனம்  இசை. இசையை சிரவண கலை எனவும் அழைப்பர். சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும்  ஒலிக் கலவையைப் பற்றிய கலை. இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது. படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரிடமும் இசை பரவி நிற்கிறது. இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகள்தான்.

தாலாட்டு கேட்ட நாள் தொட்டு தள்ளாத வயதுவரை வாழ்வில் இசையின் பங்கு ஏராளம். படித்தவை மறக்க, கண்ணால் கண்டவை களைய, கேட்ட இசை மட்டும் இன்றும்   நம்மோடு இருக்கும் மாயம் என்ன?

பள்ளியில் படிக்க கடினப்பட்டவை இன்னிசையால் இசைத்தபோது பசுமரத்து ஆணிபோல  இன்றும் இதயத்தோடு இறுக்கமாக இருக்கிறது. புதிதான அதிகாலை முதல் பொன்மாலை வந்த பின்னும் செவி வழி இன்பம் தரும் வாழ்வின் வரம் இசை. காலத்திற்கேற்ப காட்சிகள் மாறலாம், இசையின் இன்பம் மாறாது. இறைவணக்கம் தொடங்கி இறுதி உறை வரை இசை இன்றி இயங்காது இவ்வுலகு. மகிழ்ச்சி தரும் இசை அக நெகிழ்ச்சியும் உடன் தருகிறது.

இசை தனிமையில் தாங்கும் தாய், உணர்ச்சி பெருக்கி உத்வேகம் தரும் தந்தை, அரவணைத்து அன்பு செய்யும் நண்பன் இப்படி பல்வேறு பரிமாணம் பெற்றுள்ளது. இது மனிதனை மயக்கியது மட்டுமல்லாமல், இறைவனையும் இசைய வைத்துள்ளது. தேனை உண்ணும் வண்டுக்கள் மலரில் மயங்கி கிடப்பது போல, கண்ணன் குழலிசையில் கான குயிலிசையில் மயங்காத மனிதருண்டோ! இந்த இசை இதயத்துடிப்பின் இன்னொரு பரிணாமம். ஸ்வரங்களின் சுவாரஸ்யம். வார்த்தையின் வாழ்க்கை, மொழிகளின் முன்னோடி. சந்தோஷத்தின் உச்சம், ஏமாற்றத்தின் எதிர்மறை. இளைஞர்களின் இதயம், முதுமையின் மூச்சு.

இன்று உலக இசை தினம்

 

ப. கமலயாழினி