காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், சோம்நாத் முதல் இம்பால் வரையிலும், ஹிந்து கோயில்களையும் அவற்றின் சொத்துக்களையும் ஹிந்துக்களே நிர்வகிக்கும் உரிமையை மறுப்பதன் மூலம், அரசுகள் பாரதத்தில் ஹிந்து சமுதாயத்தின் உரிமைகளை முற்றிலுமாக முடக்குகின்றன. இதனால், கோயில்கள் தங்கள் வளங்களை இழக்கின்றன. ஹிந்து தர்மம் சிதைந்து வருகிறது.
துரதிர்ஷ்டவசமாக, அனைத்து அரசியல் கட்சிகளும் ஔரங்கசீப்பின் ஜிஸியா வரியை நினைவூட்டும் வகையில் ஹிந்துக்கள் மீது ஒரு வகையான மத வரியை விதித்து ஹிந்து கோயில்களை வணிக நிறுவனங்களாக மாற்றியுள்ளன. இதற்கு சமீபத்திய உதாரணம், 2019ல் உத்தரகாண்ட் அரசாங்கத்தால் 50 சார்தாம் கோயில்களைக் கையகப்படுத்தப்பட்டது.
2500 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கரர் ஹிந்து தர்மத்திற்கான அருமையான ஒரு கட்டமைப்பை உருவாக்கினார். இது நீண்ட காலமாக நல்ல நிலையில் இருந்தது. அது தற்போது சிதைந்து வருகிறது. இது மீண்டும் புணரமைக்கப்பட வேண்டும். அதாவது, ஹிந்து தர்மத்தின் ஆத்மா அப்படியே இருக்க வேண்டும். அதன் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து மாறாமல் ஒரு வலுவான நிறுவன கட்டமைப்பினை உருவாக்க வேண்டும். அரசு சாராத, ஹிந்து மதத்தை சேர்ந்த நல்ல நபர்கள், அனைத்து சாதியினரது பங்களிப்பு, பக்தர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்களால் கோயில்கள் நிர்வகிக்கப்பட வேண்டும். அனைத்து கோயில்களையும் இணைத்து ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
எனவே, அனைத்து ஹிந்துக்களும் தங்களது மாநிலங்களில் ஒருங்கிணைய வேண்டும். அனைத்து மாநில சட்டங்களையும் ரத்து செய்து, கோயில்களுக்கான புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசைக் கோர வேண்டும்.
நாகேஸ்வர ராவ் ஐ.பிஎ.ஸ் – சி.பி.ஐ முன்னாள் ஐ / சி இயக்குனர் (ஓய்வு)