லாவண்யாவின் தந்தை கோரிக்கை

தஞ்சை மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா மதமாற்ற அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து லாவண்யா மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தக்கோரி அவரது தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், லாவண்யா மரண வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்தும், நீதிமன்றம் தெரிவித்த அரசுக்கு எதிரான கருத்துகளை நீக்கக்கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் லாவண்யாவின் தந்தை முருகானந்தம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘எனது மகளின் மரண வாக்குமூலத்தில் மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட்ட பின்னரும், அவருக்கு நேரிட்ட துன்புறுத்தல், மதம் மாற மறுத்தது ஆகியவற்றை காவல்துறையினர் நிராகரித்தனர். கட்டாய மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க காவல்துறையினர் தயக்கம் காட்டினர். கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் இருந்து பள்ளி நிர்வாகத்தை அவசரஅவசரமாக விடுவிக்க காவல்துறை முனைப்பு காட்டியது. இதனால்தான் உயர் நீதிமன்றம் சில கருத்துக்களை முன்வைத்தது. தமிழகத்தில் நிலவும் கட்டாய மதமாற்றத்தை சுட்டிக்காட்டும் நோக்கிலேயே உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கள் அமைந்துள்ளன. எனது மகளின் வழக்குச் சூழலை கருத்தில் கொண்டு நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் சரியானவை. அந்த கருத்துக்களை நீக்குவதற்கான காரணங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடும் பட்சத்தில், அதற்குரிய பதில் மனு எனது சார்பில் தாக்கல் செய்யப்படும். எனவே மேற்கண்ட காரணங்களால் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தகுதியற்று இருப்பதால் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்’ என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.