திபெத் மக்களின் மகோன்னத ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா பாரதத்திலுள்ள தர்மசாலாவில் வாழ்ந்து வருகிறார். அவரது வாழ்க்கை வரலாற்று நூல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இது, 1966ம் ஆண்டு ஜனவரி மாதம், அப்போதைய பாரதப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி சோவியத் யூனியனில் உள்ள தாஷ்கண்ட் நகரில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.
தாஷ்கண்டிலிருந்து பாரதத்துக்கு திரும்பியவுடன் திபெத்துக்கு வெளியே இயங்கிவரும் தலாய் லாமா தலைமையிலான அரசை அங்கீகரிக்க லால்பகதூர் சாஸ்திரி தயாராக இருந்தார் என்பதை இந்த புத்தகம் வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் தாஷ்கண்டில் லால்பகதூர் சாஸ்திரி மறைந்ததையடுத்து எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. சுதந்திர பாரதத்தின் முதலாவது பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு, சீனாவுக்கு ஆதரவான மனநிலை கொண்டவராக இருந்தார். ஐ.நா பொதுசபையில் திபெத் விவகாரம் தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது 1959ம் ஆண்டும் 1961ம் ஆண்டு சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே பாரதம் எடுத்தது. இதற்கு நேருதான் மூலகாரணம். ஆனால் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரான பிறகு இந்த நிலைப்பாடு அடியோடு மாறிவிட்டது.
ஐ.நா பொதுசபையில் 1965ம் ஆண்டு இவ்விவகாரம் குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது திபெத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை பாரதம் எடுத்தது. அதுமட்டுமல்லாமல் தலாய் லாமாவுடன் சாஸ்திரி நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். இருவருக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்கள் நடந்துகொண்டே இருந்தன. லால்பகதூர் சாஸ்திரியின் நிலைப்பாட்டை தலாய் லாமா முழுவீச்சில் ஆதரித்தார் என்பதையும் இப்புத்தகம் தெரிவித்துள்ளது. 1966ம் ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில் புதுடெல்லியில் உள்ள தலாய் லாமாவின் பிரதிநிதி டபள்யூ.டி. சகாப்பா, தலாய்லாமாவுக்கு ஒரு செய்தி மடலை சமர்ப்பித்தார்.
இதையடுத்து 1959ல் சீன ராணுவத்தின் துப்பாக்கி முனையிலிருந்து தப்பித்து 17 நாட்கள் நெடும் பயணம் மேற்கொண்டு திபெத்திலிருந்து பாரதத்துக்கு வந்த தலாய் லாமா, எந்தச் செய்தியை செவிகுளிரக் கேட்கவேண்டும் என்று விரும்பி காத்திருந்தாரோ அந்தச் செய்தி காதில் விழும் தருணம் நெருங்கிவிட்டது என்பதற்கான அறிகுறி மேலோங்கியது. தாஷ்கண்டிலிருந்து புதுடெல்லிக்கு பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி திரும்பியவுடன் திபெத்துக்கு வெளியே இயங்கிவரும் திபெத் அரசை அங்கீகரிக்க தீர்மானித்துள்ளார் என்பதுதான் தலாய்லாமாவிடம் சகாப்பா தெரிவித்த செய்தியின் சாராம்சம். தலாய்லாமாவுக்கு மிகவும் நெருக்கமான டென்சின் கெய்ஸிதெதோங் எழுதியுள்ள ‘தலாய்லாமா அன் இல்லஸ்ரேட்டட் பயோக்ரஃபி’ என்ற புத்தகத்தில் இதுபற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தலாய்லாமாவுடன் டென்சின் கெய்ஸி தெதோங் 44 ஆண்டுகள் நெருக்கமாகப் பழகியுள்ளார். இதில் 30 ஆண்டுகள் தலாய்லாமாவின் தனிச்செயலாளராக டென்சின் கெய்ஸி தெதோங் செயல்பட்டுள்ளார். ரோலி புக்ஸ் என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ள. இந்த புத்தகத்தில் அபூர்வமான, தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதுமட்டுமல்லாமல் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.டெல்லியில் திபெத்தின் தூதரகமாக இயங்கிய அமைப்பின் தலைவராகவும் சகப்பா செயல்பட்டுள்ளார். சகாப்பாவுக்கு கொடுக்கப்பட்ட பணி, பாரத அரசுக்கும் தர்மசாலாவில் இயங்கி வரும் மைய திபெத்திய நிர்வாகத்துக்கும் இடையே பாலமாக இயங்குவதுதான்.
ஆனால் துரதிருஷ்டவசமாக 1966ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி தாஷ்கண்டில் எதிர்பாராத விதமாக லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் நிகழ்ந்துவிட்டது. இது விதியா அல்லது சதியா என்பது இதுவரை விடுபடவில்லை. உயிர் பிரிவதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் பாரதத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் லால் பகதூர் சாஸ்திரி கையெழுத்திட்டார். மை உலர்வதற்கு முன்பே அவரது உயிர் பிரிந்துவிட்டது, சோகத்தின் உச்சம். இரவு உணவை உண்ட பிறகு உறங்கச்செல்வதற்கு தயாரான வேளையில், லால்பகதூர் சாஸ்திரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால்தான் அவரது உயிர் பிரிந்தது என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் சர்வாதிகாரி பீல்டு மார்ஷல் அயூப்கானுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட சிறிது நேரத்திலேயே லால் பகதூர் சாஸ்திரிக்கு ஏன் மாரடைப்பு ஏற்பட்டது என்ற கோணம் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ உதவி செய்துவந்தது. ஆனால் இதையெல்லாம் பாரத ராணுவம் தகர்த்தது. பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களை பாரதப் படை கைப்பற்றியது.
தாஷ்கண்ட் ஒப்பந்தம் சர்வதேச அழுத்தத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்டதாகும். அமெரிக்கா, சோவியத் யூனியன், ஐ.நா சபை ஆகிய மும்முனைகளிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. பாரதப் படைகள் கைப்பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களை விட்டுவிடவேண்டும் என்ற ஷரத்து தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தது. இது பாரதத்தின் பார்வையில் சறுக்கலாகும். இதை எப்படி எதிர்கொள்வது என்ற சிந்தனை லால் பகதூர் சாஸ்திரிக்கு மன உளைச்சலை அளித்திருக்கக்கூடும் என்றெல்லாம் கூறப்பட்டது. லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் குறித்து தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசுகள், புனைவுகளையே அடுக்கின.
சாஸ்திரியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இவற்றையெல்லாம் சேர்த்து வைத்துப் பார்க்கும்போது சாஸ்திரியின் மர்ம மரணத்தில் புதையுண்டு கிடக்கும் புதிர்கள் இன்னும் விடுபடவில்லை என்பது துல்லியமாகப் புலனாகிறது.தாஷ்கண்டிலிருந்து திரும்பி வந்தவுடன் தர்மசாலாவில் இயங்கி வரும் நாடு கடந்த திபெத் அரசுக்கு அங்கீகாரம் அளிக்க லால்பகதூர் சாஸ்திரி முடிவு செய்திருந்தார். இதை சீர்குலைப்பதற்காகவே சாஸ்திரியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணம் கிளர்ந்தெழுவதை தடுக்க முடியவில்லை.
ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தின் போது 1962ம் ஆண்டு சீனா பாரதத்தின் யுத்தம் தொடுக்கும் வரை அதன் மீது நேரு மிகுந்த பரிவு கொண்டிருந்தார். பாகிஸ்தான் அமெரிக்காவின் கைப்பாவையாக இயங்கி வந்தது. இது ஒருபுறம் இருக்க கம்யூனிஸ்ட் அணியின் தலைமையாருக்கு சொந்தம் என்பது குறித்து சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் உக்கிரமடைந்தது.
இப்பின்னணியில் பாகிஸ்தானுக்கு சீனா தாராளமாக உதவிகளை வாரி வழங்கியது. பாரதத்துக்கு எதிராக பாகிஸ்தானை சீனா கொம்பு சீவிவிட்டது. சீன அதிபர் மா சே துங் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த அனைத்து அஸ்திரங்களையும் பிரயோகித்து வந்தார். தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை சீர்குலைக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. ஒரே அம்பை பிரயோகித்து பல பறவைகளை மா சே துங் வீழ்த்திவிட்டார்.
சாஸ்திரி மறைந்ததால் தர்மசாலாவில் இயங்கிவரும் திபெத் அரசுக்கு பாரத அரசின் அங்கீகாரம் கிடைப்பது தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. பாரதத்துக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே அதிருப்தியும் அவநம்பிக்கையும் வலுவடையத் தொடங்கிவிட்டது. அதுமட்டுமல்லாமல் பாரதத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.
இப்பின்னணியில்தான் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள ஜம்மு காஷ்மீரின் சாக்ஸ்கம் பகுதியை சீனாவுக்கு பாகிஸ்தான் தாரைவார்த்துக் கொடுத்தது. ராணுவ ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த காரகோரம் நெடுஞ்சாலை இப்பகுதியின் வழியாகத்தான் செல்கிறது.நேருவின் இறுதிக் காலத்திலேயே “ஹிந்தி, சீனி பாய்பாய் என்ற மனோபாவம் மறைந்து விட்டது. பாரதத்தில் சீனா மீதான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சீனாவுக்கு அனுசரணையாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்த நேருவே கடைசி காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டார்.
1962ல் பாரதம் மீது சீனா போர் தொடுத்ததை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இப்பின்னணியில்தான் 1965ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா பொதுச்சபையில் திபெத் தொடர்பான தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தில் சீனாவின் நிலைப்பாட்டை கடுமையாகக் கண்டித்து பாரதப் பிரதிநிதி ரபிக் சக்காரியா உரையாற்றினார். அதுமட்டுமல்லாமல் சீனாவுக்கு எதிராக பாரதம் வாக்களித்தது.
நேருவின் பாதையிலிருந்து சாஸ்திரி முற்றிலுமாக விலகிவிட்டார். இப்படிப்பட்ட சாஸ்திரியை தொடர்ந்து இயங்கவிட்டால் அது சீனாவுக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்று மாசேதுங் கருதினார். இந்த கணக்கின் அடிப்படையில்தான் சாஸ்திரியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கும் என்ற அனுமானத்தில் உண்மை பொதிந்துள்ளதை உதறித்தள்ளிவிட முடியாது.
பாரதத்துக்கும் பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற யுத்தத்தில் பாகிஸ்தான் சர்வாதிகாரி அயூப்கானை பாரதப் பிரதமர் சாஸ்திரி கதிகலங்க வைத்துவிட்டார். பாரதத்தின் கொள்கையில் மகத்தான மாறுதல் ஏற்பட்டு வருகிறது என்பதை உலகம் உணர்ந்து கொள்ளத் தொடங்கிவிட்டது. இவ்வளவு யூகங்களும் மர்மங்களும் பின்னிப்பிணைந்துள்ள நிலையிலும் லால்பகதூர் சாஸ்திரியின் சர்ச்சைக்கிடமான மரணத்தில் புதையுண்டு கிடக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசுகள் எந்த நடவடிக்கையையும் எடுக்க முற்பட வில்லை.
இதனால்தான் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும் என்பதைக்காட்டிலும் அவிழ்க்கக்கூடாது என்பதுதான் கடந்தகால காங்கிரஸ் அரசுகளின் உள்நோக்கம் என்ற குற்றச்சாட்டு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
கட்டுரையாளர் : மூத்த பத்திரிகையாளர் ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து
தமிழில் : அடவி வணங்கி