பாரதம், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் இணைந்து உருவாக்கிய ‘குவாட்’ கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இன்று நடக்கிறது. இதில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா பங்கேற்கின்றனர். கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு ஏற்பட்ட யோசனையின் அடிப்படையில் 2007ல் உருவானது, குவாட் அமைப்பு. இதுவரை, வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் அளவில் மட்டுமே குவாட் மாநாடு நடந்துள்ளது. முதன்முறையாக,இந்நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு, இணையதளம் வாயிலாக இன்று நடைபெற உள்ளது. கடற்பகுதி உரிமைகள் தொடர்பாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தாலும் இதன் தற்போதைய குறிகோள்களும், செயல்பாடுகளும் வேறு வடிவம் பெற்றுள்ளன. குறிப்பாக பாரதத்தில் சீன ஊடுருவல், ஜப்பானுடனான சீனாவின் எல்லைப் பிரச்சனை, அமெரிக்க விவகாரங்களில் சீனாவின் தலையீடு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், உலகளாவிய பொருளாதார பிரச்னை, பருவநிலை மாறுபாடு போன்றவைகளால் இந்த தலைவர்கள் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.