மக்கள் எவ்வழியோ அரசன் அவ்வழி!

யுதிஷ்டிரன் சூதாடி அனைத்தையும் தோற்றுவிட்டு காட்டுக்குப் போகிறார். அப்போது மக்கள், தாங்களும் அவரோடு வருவோம் என்று கூறுகிறார்கள். துரியோதனன், மக்களை இம்சித்ததாகவோ, அடித்து வரி வசூல் செய்ததாகவோ எங்குமே இல்லை. ஒருமுறை காட்டில் ஒரு பெண்ணிடம் தவறான எண்ணத்துடன் அணுகியபோது, ‘‘நான் ஹஸ்தினாபுரத்து இளவரசன். உனக்கு விருப்பமிருந்தால் வா’’ என்கிறான். வன்முறை செய்யவில்லை. யுத்தத்தில் அடிபட்டு இறக்கும் தருவாயில் கூட பீமனைப் பார்த்து, ‘‘நான் ராஜாவாக வாழ்ந்துவிட்டேன். கழுகும் நரியும் கால் வைக்கப்போகும் தலையில், நீ வைத்திருக்கிறாய். அவ்வளவுதான் வேறுபாடு. எனது வேலைக்காரர்களை நான் நன்றாக பார்த்துக்கொண்டேன்.

விருந்தினர்களை சரியாக கவனித்தேன். அக்னிஹோத்தர வேத காரியங்களை சரியாக செய்தேன். அதனால் எனக்கு மரணத்தை பற்றிய பயம் இல்லை’’ என்ற போது வானிலிருந்து பூ மாரி பொழிந்தததாம். மக்களுக்கு எந்த கெடுதலும் செய்யாதவன் என்று தெரிந்திருந்தும், பாண்டவர்களுக்கு தீமை செய்த துரியோதனன் இருக்குமிடத்தில் நாங்கள் எப்படி இருப்போம் என்று மக்கள் தவித்தார்கள். ‘நல்லவர்களாகிய நீங்கள் இருக்குமிடத்துக்கே நாங்களும் வருகிறோம். நல்லவர்களின் சேர்க்கை மனிதர்களுக்குள் தோஷத்தை சேர்க்காது. பூவின் மணம் நார், கூந்தல், வஸ்திரம், காற்று, நீர் என்று எல்லாவற்றுக்கும் மணம் தருகிறதோ அது போல நல்லவர்களின் சேர்க்கை நன்மையையே தரும். மாறாக, தீயவர்களின் சேர்க்கை, பார்வை, உரையாடல், ஸ்பரிசம், அவர்களோடு சேர்ந்து அமர்வது, எழுந்திருப்பதால் தர்மார்த்த காரியங்களுக்கு தீங்கு உண்டாகிறது.

அவர்கள் தரும் தானங்களைப் பெற்றால், எங்களுக்கு தீய எண்ணம் பெருகும். பாவிகள் தரும் உணவை, செல்வத்தை, பசுக்களைப் பெற்றால் எங்களுக்கும் பாவம் பெருகும். அதனால், இங்கிருந்துகொண்டு அவர்களை அண்டி வாழ்வதை விட, நாங்ள் காட்டுக்கு உங்களுடனேயே வந்துவிடுகிறோம்’ என்றனர். இன்று இதே மக்கள் என்ன சொல்வார்கள், எப்படி இருக்கிறார்கள்?‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’, ‘நாய் விற்ற காசு குறைக்கவா போகிறது’, ‘காசே தான் கடவுளடா என்று இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை இருப்பவனுக்குக் கூட பாவ புண்ணியங்கள் மீது, தர்ம அதர்மங்கள் நம்பிக்கையில்லை. உண்டியலில் காசு போட்டால், ஏதாவது அனாதை ஆசிரமத்துக்கு பணம் கட்டினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சௌகரிய தர்மங்களைப் பின்பற்றி சகல பாவங்களையும் செய்கிறான். அரசாங்கத்தில் பணம் தருகிறார்கள் என்றால் தகுதியும், தேவையும் இருக்கிறதோ இல்லையோ முதல் ஆளாக சென்று பெறுகிறான்.

இன்றைய விளம்பரம், அழகான பேச்சுக்கள், உண்மையற்ற விஷயங்கள், சாரமற்ற விஷயங்கள், வாட்ஸ் அப் பொய்கள், ஊடக பொய்களென்று எந்த இனிப்பான விஷத்தை உணர்ச்சி பொங்க தந்தாலும், ஆஹா என்று வாங்கிக்கொள்கிறான். எவ்வளவு தூரம் பின்பற்றுகிறோமோ அவ்வளவு தூரம் தர்மம் நம்மை தொடரும். நாம் விலக்கியது நம்மை தொடர வேண்டுமென்று எண்ணுவது என்ன நியாயம்?ஏதோ ஒன்று என்ற மனநிலையில் நாம் இருப்பதால் நமக்கும் ஏதோ ஒன்றுதான் கிடைக்கிறது. அடித்துச் சொல்லுங்கள், இதுதான் வேண்டுமென்று. சத்தியம், தர்மம், நியாயம் இவற்றுக்கு அடங்காத எதுவாக இருந்தாலும் வேண்டாமென்று சொல்ல பழகுங்கள். இப்படியே இருக்க இருக்க, ஒரு நாள் அந்த சத்தியம் விஸ்வரூபமெடுத்து நம் முன்னே நிற்கும். எல்லாமே சரியாகும். நாம் முழுமையாக சரியாக, உண்மையாக, தர்மவானாக நடந்துகொள்ள முயல்வோம். ஆட்சியாளர்கள் சரியானவர்களாகக் கிடைப்பார்கள்.