கொல்லப்பட்ட பத்திரிகையாளர்

மேற்கு பாகிஸ்தானில் கராச்சிக்கு அருகில் வசிக்கும் ஒரு வீடியோ நிருபர் நஜிம் ஜோகியோ. இவர், பாகிஸ்தானில் வேட்டையாட தடைவிதிக்கப்பட்ட சில விலையுயர்ந்த பறவைகளை அங்குள்ளவர்கள் சட்டவிரோதமாக வேட்டையாடுவது குறித்த வீடியோக்களை ரகசியமாக படம்பிடித்து பதிவேற்றினார். அவர் புகைப்படங்கள் எடுத்த இடங்கள் பல சர்வதேச குற்றவாளிகள் வந்து தங்கி செல்லும்பகுதி என்பதாலும் அவர்கள் பல அமைச்சர்கள் அரசு அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதாலும் நஜீமுக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்களுடன் அவரது உடல் மாலிர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை கைது செய்ததாக உள்ளூர் போலீசார் தெரிவித்த நிலையில், பாகிஸ்தானின் சிந்து சட்டமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது கொலையை திட்டமிட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். பிரான்சின் பாரிசில் இருந்து செயல்படும் எல்லைகளற்ற நிருபர்கள் (RSF அமைப்பு) நஜிம் ஜோகியோ கொலை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என கோரியுள்ளது.