கெஜ்ரிவாலின் குறுக்கு புத்தி

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு அரசு செலவில் ஹிந்தி நாளிதழான டைனிக் ஜாக்ரனில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அந்த விளம்பரத்தில் ஸ்ரீராமரின் படமே இல்லை. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலின் படம் பிரதானமாக இடம் பெற்றது. மேலும், ஹிந்து மத உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக, விளம்பரத்தின் மையப் பகுதி சர்ச்சைக்குரிய ஒரு கட்டடமாக காட்டப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தையடுத்து சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கெஜ்ரிவாலை கடுமையாக சாடினர். பா.ஜ.க தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, “அயோத்தி ராமர் கோயில் வடிவம் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.  கெஜ்ரிவால் அதனை மசூதி வடிவில் குவிமாடம் போன்று சித்தரித்துள்ளார். கோயிலின் மீதுள்ள காவி கொடியையும் அதில் நீக்கிவிட்டார்” என குற்றம் சாட்டியுள்ளார். சில நாட்களுக்கு முன் கெஜ்ரிவால் காஷ்மீரி ஹிந்துக்களை கேலி செய்து அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள், இனப் படுகொலையை விவரித்த தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் போலி என்று விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.