‘சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான பல ஏக்கர் நிலங்கள் சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவங்கரை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. முன்பு கோயில் அறங்காவலர்களாக இருந்தவர்கள் இந்த நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கவில்லை. கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன் அந்த நிலங்களில் சட்டவிரோதக் கட்டுமானங்களும் கட்டப்பட்டுள்ளன. இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். கோயில் நிலங்கள் பலருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், 79 பேர் செலுத்தும் வாடகை விவரங்களை மட்டுமே அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. எனவே, கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்’ என சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 2-வது வாரத்துக்கு தள்ளி வைத்தது.