கனடா நாட்டின் தேர்தலில் விடுதலை கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் சந்திர ஆர்யா. கர்நாடக
மாநிலத்திலுள்ள துவரலு கிராமத்தை சேர்ந்தவர். அவரது பெற்றோர் இன்னும் சொந்த கிராமத்தில் தான் வசித்து வருகின்றனர். இவர், கனடா நாடாளுமன்றத்தில் தனது தாய்மொழியான கன்னடத்தில் பேசினார். அதில், “இந்த சபையில் கன்னடத்தில் பேச அனுமதி கிடைத்தது பெருமையாக உள்ளது. பாரதத்தின் கர்நாடக மாநிலத்தில் பிறந்து கனடாவில் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டு கன்னடத்தில் பேசியது என்பது 5 கோடி கன்னடம் பேசும் மக்களுக்கு பெருமை அளிக்கும் விஷயம்” என்றார். மேலும், தனது டுவிட்டர் பதிவில், “கனடா நாடாளுமன்றத்தில் எனது தாய்மொழி கன்னடத்தில் பேசினேன். பாரதத்துக்கு வெளியே வெளிநாட்டு நாடாளுமன்றத்தில் முதல் முறையாக கன்னடம் பேசப்பட்டுள்ளது” என்றார். அவரது பேச்சு சமூக வலைத்தளத்தில் பரவலாக பாராட்டப்பட்டு பகிரப்பட்டது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார் உள்ளிட்டோர் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.