டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா 69 கி.கி பிரிவில் அரையிறுதியில் 0-5 என்ற புள்ளிகளில் துருக்கி வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இது, டோக்கியோ ஒலிம்பிக்கில் பாரதம் வென்ற 3வது பதக்கம். அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா பங்கேற்ற அரை இறுதிப்போட்டி நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதனையொட்டி, அவர் வெற்றி பெற வேண்டி அசாம் முதல்வர் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்தார் என்பதும் இப்போட்டியை காண்பதற்காக அம்மாநில சட்டப்பேரவை 20 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மல்யுத்தப் பிரிவில், பாரதத்தின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57 கிலோ எடைப்பிரிவில் பாரதத்தின் ரவிகுமார் தாஹியா, கஜகஸ்தானின் நுரிஸ்லாம் சனாயேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் பாரதத்திற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. மல்யுத்தத்தில் 86 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு பாரத வீரர் தீபக் புனியா, சீன வீரருடன் மோதி 6க்கு 3 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.