மாற்றம் பெறும் ஜம்மு காஷ்மிர்

பாரதத்தின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, ஜம்மு காஷ்மீர் அரசு 75 பள்ளிகள் மற்றும் 75 சாலைகளுக்கு காவல்துறை, ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப் ஆகியவற்றில் வீரதீர சாகசம் செய்த மக்களால் அதிகம் அறியப்படாத வீர்ர்கள், தியாகிகளின் பெயர்களை வைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக கிராமங்கள் மற்றும் நகராட்சி வார்டுகளில் உள்ள அரசுப் பள்ளிகளையும் சாலைகளையும் மறுபெயரிட அடையாளம் காணுமாறு 10 மாவட்ட துணை ஆணையர்களுக்கு, ஜம்மு காஷ்மிர் தலைமைச் செயலாளர் டாக்டர் அருண் குமார் மேத்தா கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, கடந்த 2019ல் காஷ்மிரில் உள்ள சில விளையாட்டு மைதானங்கள் மற்றும் சாலைகளுக்கு மறுபெயரிடப்பட்டது. சேனானி நஷ்ரி சுரங்கப்பாதைக்கு ஷியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் ஷேர் இ காஷ்மிர் கிரிக்கெட் ஸ்டேடியம் சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 2020ல் ஸ்ரீநகர் மாநகராட்சி மேயர் ஜுனைத் அசிம் மாட்டு, காஷ்மிர் நகர சதுக்கங்களுக்கு 30 ஆண்டு கால பயங்கரவாதத்தின் போது கொல்லப்பட்ட சில முக்கிய பிரமுகர்களின் பெயர்களை வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்திரா காந்தி நினைவு துலிப் கார்டனின் பெயரை காஷ்மீர் துலிப் கார்டன் என மாற்றுவதற்கான பரிந்துரைகளும் அப்போது செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தேச சுதந்தரத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆங்கிலேயர்கள் பெயர் தாங்கிய சாலைகள், உருது பெயர் கொண்ட தெருக்களின் பெயர்களை, இதுபோல தமிழக சுதந்தர போராட்ட வீரர்கள், தியாகிகளின் பெயர்களாக தமிழக அரசு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு.