ஜாலியன்வாலா பாக் நினைவிட வளாகம்

கடந்த 1919 ஏப்ரல் 13ம் தேதி பஞ்சாப்‌ மாநிலம்‌ அமிர்தரசில் உள்ள ஜாலியன்வாலா பாக் எனும் இடத்தில் கூடிய மக்கள் கூட்டத்தின் மீது ஆங்கிலேய அதிகாரி ஜெனரல் டயர் தலைமையிலான காவலர்கள் ஈவு இரக்கமின்றி துப்பாக்கிசூடு நடத்தினர். இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் இறந்தனர். சுதந்திரத்திற்காக உயிரை தியாகம் செய்தவர்களின் நினைவை போற்றும் வகையில், அங்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. அந்த நினைவிடத்தில் புதுப்பிக்கும் பணிகளை சமீபத்தில் மத்திய அரசு மேற்கொண்டது. அதில் முக்கிய இடமான சாஹிதி கிணறும் சீரமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின்‌ வசதிக்காக நடைபாதைகள்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பயன்பாட்டில்‌ இல்லாத கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு நான்கு அருங்காட்சியகங்கள்‌ உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் 1919 ஏப்ரல்‌ 13 அன்று நடைபெற்ற நிகழ்வுகளை காண்பிக்கும்‌ ஒலி ஒளி காட்சியும்‌ இடம்பெறும்‌. புதுப்பிக்கப்பட்ட இந்த நினைவிடத்தை பிரதமர்‌ மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்‌. காணொலி காட்சி வழியாக‌ நடைபெறும்‌ இந்நிகழ்வில்‌ மத்திய அமைச்சர்கள்‌ உள்ளிட்ட பலர்‌ பங்கேற்க உள்ளனர்‌.