வாஷிங்டன்,-அமெரிக்கா சென்றுள்ள நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை, வாஷிங்டன் நகரில் நேற்று சந்தித்துப் பேசினார்.
ஐ.நா., பொதுசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சமீபத்தில் சென்றார்.வட அமெரிக்க நாடான கனடா, காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பது குறித்து ஐ.நா., பொதுசபையில் வெளிப்படையாக பேசினார். அதன் பின், வாஷிங்டன் திரும்பினார். அங்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை நேற்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் நோக்கம் குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறையும் மவுனம் காத்து வருகின்றன. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான இந்தியா – கனடா இடையே ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாக கூறப்படுகிறது.முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது:இந்த சந்திப்பின் போது, அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் என்ன பேசப்போகிறார் என்பது குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில், கனடா அரசின் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி இந்தியாவிடம் பலமுறை அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.