பிரதமர் மோடி கடந்த மே 6 அன்று ஜார்கண்ட், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய நான்கு மாநில முதல்வர்கள், புதுவை, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுனர்கள் ஆகியோருடன் கொரோனா நிலைமை குறித்து பேசினார். இது குறித்து கருத்து கூறிய ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பிரதமர் மோடி, ‘மனத்தின் குரல்’ நிகழ்ச்சியில் பேசுவது போல பேசுகிறார் என கூறியிருந்தார். இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, “நான் உங்களிடம் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நமக்குள் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், இதுபோன்ற அரசியலில் ஈடுபடுவது நம் சொந்த தேசத்தை பலவீனப்படுத்தும். ஒரு சகோதரனாக இதை நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில் இது பழிப்போடுவதற்கான நேரமல்ல. தொற்றுநோயை எதிர்த்து போராட ஒன்றிணைந்து, நமது பிரதமரின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது” என ஹேமந்த் சோரனின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் கொடுத்துள்ளார்.