உ வே சா பிறந்தநாள்

தமிழ் தாத்தா உவேசா ஏட்டு சுவடிகளில் உள்ள பண்டையை இலக்கியத்தை இலக்கணங்களை அச்சுப் பிரதியில் ஏற்றி அரும்பெறும் தொண்டு செய்தார். இது யாவரும் அறிந்தது. அறியாத சில விஷயங்களும் உண்டு. ‌அவற்றைப்பார்த்தால் அவருடைய தமிழ்த்தாகத்தை உணரலாம்.

தாரமங்கலம் என்னும் ஊரில் உள்ள ஆலயத்தில் மிகவும் சிறந்த சிற்பங்கள் உள்ளனவென்றும், அங்குள்ள ஆதிசைவர்களின் வீட்டில் பழம் சுவடிகள் இருக்கும் என்றும் கேள்வி பட்டு அங்கே போயிருக்கிறார் உவேசா. ஆதிசைவர்களை அணுகினார். அவர்களுடைய ஏடுகளை கவனித்த பொழுது பெரும்பாலும் ஆகமங்களும் பத்ததிகளும் தான் இருந்தன என்கிறார். ஆனால் அங்குள்ள ஆலயத்தில் அவர் கண்ட சிற்பக் காட்சி பற்றி மிக அழகாக எழுதி இருக்கிறார்‌ உ வே சா. ராமர் வாலியை வதம் செய்யும் கோலம் மிகவும் அருமை என்கிறார். ராமபிரான் உருவத்தின் அருகில் சென்று பார்த்தல் வாலியின் உருவம் தெரிகிறது : வாலியின் உருவத்துக்கு அருகில் இருந்து பார்த்தால் ராமபிரான் உருவம் தெரியவில்லை, ராமன் மறைந்திருந்து வாலியை எய்தார் என்ற வரலாற்றை சிற்பி எவ்வளவு நன்றாக அமைத்துக் காட்டியுள்ளார் என்கிறார் உவேசா. அவ் ஊரில் இருந்த சிவாலயத்திலும் அரும்பெறும் சிற்ப பொருட்கள் இருந்தன அவை சராசரியாக பராமரிக்கப்படவில்லை என்று தன் உள்ள கிடக்கையை வெளிப்படுத்துகிறார் உவேசா. அதே ஊரில் ஒரு வட்டமான குளம் ஒன்றை பார்த்து அங்கிருக்கும் சிற்ப வேலைகளையும் பார்க்கிறார். அவருடன் வந்த நண்பர் ஒரு கல்லை எடுத்து அக்குளத்திலே நேராக ஓங்கி அடிக்க அந்த கல் எதிர்ப்பக்கத்தில் அடித்து மீண்டும் எதிர்த்து அடித்து இப்படியே மூன்று பக்கங்களிலும் பந்து போல் அடித்து பழகி எடுத்துக்கே திரும்பி வந்தது . இந்த அதிசயத்தைக் கண்ட நான் இது யாருடைய திருப்பணி என்று வினவினேன், அந்தக் காலத்திலே அரசாங்க அதிகாரியாக இருந்த கட்டியப்ப முதலியார் உடைய திருப்பணி என்று கூறினார் அவ்வூர்க்காரர். தாரமங்கலம் சென்றதில் சிலப்பதிகாரம் கிடைக்காவிட்டாலும் சிற்பச் செல்வம் கண்டு களித்த திருப்தியை பகிர்கிறார் உவேசா.

கரிவலம் வந்த நல்லூருக்கு சென்ற உவேசா, அங்கே பால்வண்ண நாதர் சன்னதிக்கு சென்று மன்னர் வரகுண பாண்டியர் எளிய நடையில் எழுதிய தமிழ் பாடல்களை ரசிக்கிறார் அவர் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு அக்கோவிலின் தர்மகர்த்தாவை தேடிச் சென்று வினவுகிறார்.. இவ்வூரில் வரதுரங்க ராம பாண்டியருக்கு வருடம் தோறும் ஆலய செலவில் சிரார்த்தம் நடந்து வருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன் அது நடக்கிறதா என்று கேட்டார். அவரும் நடந்து வருவதாக கூறினார். பின்னர் வரகுண பாண்டியர் பாதுகாத்த ஏட்டுச்சுவடிகள் பற்றி கேட்டார் உ வே சா. அதைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது என்றும் வரகுண பாண்டியனின் மறைவுக்குப் பின் அவர் ஏட்டுச்சுவடிகள் கோவிலை சேர்ந்து விட்டன என்றும் பதிலளிக்கிறார் உள்ளூர்காரர். உ‌வேசா, படபடத்து அவை எங்கே இருக்கின்றன என்று வினவுகிறார். குப்பையும், கூளமும் கணக்குச்சுருணைகளாகக் கலந்து கிடக்கின்றன ஆகையால் ஆகம சாஸ்திரத்தில் சொல்லி இருக்கிற படி இங்கு இருக்கிறவர்கள் செய்துவிட்டார்கள் என்கிறார் கோவில் சார்ந்தவர். உவேசா பதற்றத்துடன் ‘ என்ன செய்து விட்டார்கள்’ பழைய ஏடுகளை கண்ட கண்ட இடங்களில் போடக்கூடாதாம் அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்து விட வேண்டுமாம் இங்கே அப்படித்தான் செய்தார்கள்,என்றார் தனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்தி இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா அப்படி சொல்லி இருந்தால் அந்த ஆகமத்தை அல்லவா ஆகுதி செய்ய வேண்டும் என்று கேட்கிறார் உவேசா. பழைய சுவடிகள் சிதிலமான நிலையில் இருந்தால் அவற்றைப் பிரதி பண்ணிக்கொண்டு பழம் பிரதிகளை ஆகுதி செய்வது வழக்கம்: ஆனால் பிற்காலத்து மேதாவிகள் பிரதி செய்வதை மறந்து விட்டு சுவடிகளை தீக்கிறையாக்குவதும், நீரில் விடுவதுமான பாதக செயல்களைச் செய்தார்கள்.‌ என்ன பேதமை! இந்த எண்ணத்தால் அருமையான சுவடிகள் மறைந்தன இனி இந்த நாட்டிற்கு விடிவு உண்டா என்று புலம்புகிறார் உவேசா.

பின்னர் அவர் ஆலயத்துக்குள் சென்று இந்த அக்கிரமம் இனியாகிலும் நடவாதபடி திருவள்ளம் இரங்க வேண்டும் என்ற பிரார்த்தித்துக் கொண்டேன் என்கிறார். இப்படியே தன்னுடைய ஊர் பிரயாணங்களை தொடர்கிறார் உவேசா.

திருநெல்வேலியில் தொடங்கிய அவருடைய பயணத்தில் சிலப்பதிகார மூலப்பிரதி ஒன்றும் மூலமும் உரையும் உள்ள பிரதி ஒன்றும் கிடைத்தன, ஆனால் உரையோ குறையாகவே இருந்தது. பாளையங்கோட்டையில் சில இடங்களுக்கும் ஸ்ரீவைகுண்டம் பெருங்குளம் போன்ற இடங்களுக்கும் சென்று அவர் மடாதிபதிகளை சந்திக்கிறார். பின்னர் ஆறுமுகமங்கலம் அடைந்த உ வே சா கால்டுவெல் காலேஜின் தமிழ் பண்டிதரான குமாரசாமி பிள்ளை மருமகன் ஆகிய சுந்தரமூர்த்தி பிள்ளை வீட்டில் அகநானூறு புறநானூற்றின் குறை பிரதி ஒன்றும் சிலப்பதிகார உரை தமிழ் நாவலர் சரித்திரம் என்பவை கிடைத்தது பற்றி கூறுகிறார். அவ்வூர் அக்ரஹாரத்தில் உ வே சாவுக்கு பல் சுவை உணவு பரிமாறப்படுகிறது அதை வியக்கும் உவேசா அவ்வூர் ஆறுமுகமங்கலம் பெரிய ஊர் என்றும் 1008 அந்தணர் வீடுகள் அங்கு உண்டென்றும் அதில் ஒருவர் விநாயகர் என்றும் அதனாலேயே அவருக்கு ஆயிரத்தெண் விநாயகர் என்பது திருநாமம் என்று குறிப்பிடுகிறார்.

ஆறுமுகமங்கலத்தில் இருந்து திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவரை தரிசித்து ஆழ்வார் திருநகரி சென்று ஏடுகளைத் தேடுகிறார் உவேசா. அங்கு சுப்பையா பிள்ளை வீட்டில் அதைப் பற்றி விசாரிக்கிறார் . அவ்வீட்டார் ‘ வீட்டில் பழுதுபட்டு உபயோகமில்லாமல் கிடந்த ஏட்டு சுவடிகளை, முதிய பெண்கள் கூற்றுக்கிணங்க ஒரு ஆடி18 அன்று வாய்க்காலில் விட்டு விட்டேன் என்கிறார் .‌‌ மனதில் சிறு நெருடலின்றி கூறியவர் சுப்பையா பிள்ளை. இதைக் கேட்ட உ வே சாவுக்கு மனம் மருகியது.‌ கரிவலம் வந்த நல்லூரில் ஏடுகளை ஹோமம் செய்தனர் இங்கேயும் வெள்ளத்தில் விடுகின்றனர் தமிழின் பெருமையை சொல்லிய பெரியோர் தமிழ் நெருப்பில் எரியாமல் நின்றது என்றும் நீரில் ஆழாமல் மிதந்ததென்றும் பாராட்டி இருக்கிறார்கள் அந்தோ அதே தமிழ் இன்று நெருப்பில் எறிந்தும் நீரில் மறைந்தும் புறக்கணிக்கப்படுவதை அவர்கள் பாராமலே போய்விட்டார்கள் பார்க்கும் துர்ப்பாக்கியம் நமக்கு அல்லவோ என்கிறார் உவேசா.

தன்னுடைய பயணத்தை அம்பாசமுத்திரம் மற்றும் நாங்குநேரி சென்று அங்குள்ள வானமா மலை மடத்தில் ஏடுகளை தேடினார் உவேசா. அதில் பல கணக்குச் செய்யுள்களும் கம்பராமாயணம் ஏடுகளும் கலந்திருந்தன என்கிறார் . ‌ நாங்குநேரியில் இருந்து களக்காட்டை அடைந்து அங்குள்ள இரண்டு சைவ மடங்களிலும் தேடிப் பார்க்கிறார் . அதன் தலைவராகிய சாமிநாத தேசிகர், தானே அங்கிருந்த மரப்பத்தாயத்தில் ஏணி வைத்து ஏறி சுவடிகளை எல்லாம் எடுத்துப் போடுகிறார்.

பல பிரபந்தங்களும் புராணங்களும் சமஸ்கிருத இலக்கியங்களும் பெயரில்லாமல் இருந்தவற்றை பெயர் எழுதி வைத்தேன் என்கிறார் உவேசா.

பத்துப்பாட்டு முழுவதும் அடங்கிய பிரதி ஒன்று கிடைத்தது அது கண்டு நான் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினேன் இதற்காக எவ்வளவு அலைந்திருக்கிறேன் இது முன்பே கிடைத்திருந்தால் எவ்வளவு அனுகூலமாக இருந்திருக்கும் இப்பொழுதாவது இரண்டாவது பதிப்புக்கு உபயோகித்துக் கொள்வேன் என்று கூறி அதை பெற்றுக் கொண்டேன் என்கிறார். இந்த சந்தோஷத்தில் மூன்று நாட்கள் தான் அங்கே தங்கி இருந்ததையும் அங்கே உள்ள ஆலயத்திற்குச் சென்று சத்யவாகிசப் பெருமானை தரிசித்ததையும் மகா மண்டபத்தில் 21 கதிர்கள் உள்ள தூண்கள் பற்றியும் குறிப்பிடுகிறார். மூன்று ஸ்தாயிகளும் உள்ள 21 ஸ்வரங்கள் வீர மார்த்தாண்ட பாண்டியன் திருப்பணி செய்த ஆலயம் என்றும் கூறுகிறார்.

மேலே

குறிப்பிட்டவைகள்

உ வே சா அவர்களின் பயணங்களில் ஒரு பகுதியே.‌ விடாமுயற்சியும், உழைப்பும் நமக்கு அளித்த இலக்கியச் செல்வங்கள் அரியன, பெரியன.

90க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி மூவாயிரத்துக்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளை கையெழுத்தேடுகளை சேகரித்து வைத்திருந்தார் உவேசா. அவர் பதிப்பித்தவை சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், பெருங்கதை, 12 புராணங்கள் 9 உலா நூல்கள் ஆறு தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், நான்கு அந்தாதி நூல்கள், இரண்டு பரணி நூல்கள், இரண்டு மும்மணி கோவை நூல்கள், இரண்டு இரட்டை மணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை மற்றும் சிற்றிலக்கியங்கள் நான்கு. ‌

இதைவிட தமிழுக்கு கொடையுண்டோ!

திருமதி.ஹேமமாலினி !