இதுதான் அரசுமுறை பயணமா?

அமெரிக்க வெளியுறவு துறை செயலாளராக இருந்த ஹிலாரி கிளிண்டன், தானே நேரில் சென்னை வந்து ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்து அமெரிக்கா வர அழைப்பு விடுத்தும் ஜெயலலிதா எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை என்பது வரலாறு.

இந்நிலையில், தமிழக முதல்வராக பதவியேற்று முதல்முறையாக வெளிநாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார் ஸ்டாலின். துபாய் எக்ஸ்போவில் பாரத அரங்கத்தில் தமிழ்நாடு அரங்கு திறப்பு, தொழில்துறையினர் சந்திப்பு, தமிழகத்துக்கு முதலீடுகள் ஈர்ப்பு என இதற்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், முதல்வர் பயணித்தது தனி விமானத்தில் என்பதுடன் அவருடன் பயணித்தது யார் என பார்த்தால், அதில் அவரது மனைவி, மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன், மருமகள், பேரக் குழந்தைகள் என குடும்ப உறுப்பினர்கள்தான் உள்ளனர். இதனால், அவர் மேற்கொண்டது உண்மையிலேயா அரசுமுறை பயணம்தானா அல்லது குடும்பப் பயணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், இதுபோன்ற குடும்பப் பயணங்கள், அங்குள்ள முதலீடுகளை ஈர்ப்பது எல்லாம் ஸ்டாலினின் குடும்பத்தினர் நடத்தும் தொழில்களுக்காக மட்டுமா என்ற சந்தேகத்தையும் மக்களிடம் எழுப்பியுள்ளது. பொதுவாக முதலீடுகளை ஈர்க்க, தொழில் துறையினரை சந்திக்க செல்லும் குழுவில் அத்துறை அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகள், அந்த தொழில்களில் முதலீடு செய்யவுள்ள உள்நாட்டுத் தொழில்துறையினர்தான் பயணிப்பார்கள். அதுதான் வணிக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு உபயோகமாக இருக்கும். இதுதான் காலம் காலமாக  உலகெங்கும் பின்பற்றப்படும் நடைமுறை. நேரு குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் போன்றோர் இதில் விதிவிலக்கு.

ஸ்டாலினுடன் பயணித்துள்ள இவர்கள் யாரும் அத்துறை அமைச்சர்களோ, அரசு உயர் அதிகார்களோ கிடையாது. ஒருவேளை ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள், தொழில் துறையினர் என்ற பெயரில் சென்றிருந்தால், அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், அங்கு எந்த தொழில் விஷயமாக செல்கிறார்கள், யாரை சந்திக்கிறார்கள், எந்தெந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்ற விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்குமா? குடும்பத்தினரின் பயணம் சொந்த செலவிலா அல்லது அரசு செலவிலா? தனி விமானம் எதற்காக? என பல கேள்விகள் மக்கள் மனத்தில் எழுந்துள்ளன. பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக அதிகாரிகளுடன் வெளிநாடுகளுக்கு சென்றபோது கடுமையாக விமர்சித்த கூட்டமெல்லாம் இப்போது ஆழ்துயிலுக்கு போய்விட்டன போலும்.

முகமது பின் துக்ளக் திரைப்படத்தில், வறுமையை ஒழிக்க தனது தலைமையில் ஒரு குழு வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்லப்போவதாக அறிவிப்பார் சோ. ஒருவர் அதை பற்றி கேள்வி கேட்கையில், அதற்கு சோ, நான் வெளிநாடுகளுக்கு சென்று சுற்றி பார்க்க வேண்டாமா? என கோபமாக கேட்பார் என்ற காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

மதிமுகன்