இதுவா அனைவருக்குமான அரசு?

தீபாவளிக்கு விடுமுறைவிட கிறிஸ்தவ நாடான அமெரிக்காவின் நாடாளூமன்றத்தில் தீர்மானம் முன்வைக்கப்படுகிறது. இங்கிலாந்து பிரதமர் உட்பட பல உலகத் தலைவர்களும் தீபாவளி வாழ்த்து சொல்கின்றனர். பாரதத்தில் ஜனாதிபதி, பிரதமர், ஆளுனர் என அனைவரும் வாழ்த்து சொல்கின்றனர். ஆனால், தி.மு.க அரசின் முல்வராக உள்ள ஸ்டாலின் மட்டும் வாழ்த்து சொல்லவில்லை.

தீபாவளி மட்டுமல்ல, அனைத்து ஹிந்து பண்டிகைகளுக்கும் இவர் வாழ்த்து சொல்வதில்லை. அவர் வாழ்த்து சொல்லி இங்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம். எனினும், கிறிஸ்தவ முஸ்லிம் பண்டிகைகளுக்கு ஓடோடி சென்று வாழ்த்து தெரிவிப்பதும் விழாக்களில் கலந்துகொண்டு குல்லா போட்டு கஞ்சி குடிப்பது, கேக் உண்பது எல்லாவற்றையும் செய்யும் ஸ்டாலின், ஹிந்துக்கள், ஹிந்து பண்டிகைகள் என்று வந்தால் மட்டும் நாத்திகராகி விடுகிறார். சமீபத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில்கூட அவர் திருநீற்றை தவிர்த்தது நினைவில் இருக்கலாம். சரி, இதெல்லாம் அவரின் கட்சி கொள்கையாகவே இருக்கட்டும், அக்கட்சியில் உள்ள ஹிந்துக்களுக்கு அது உரைக்கவில்லை என்றால் போகட்டும்.

ஸ்டாலினின் மனைவி ஹிந்து கோயில்களுக்கு செல்கிறார் என்றால் அது அவரின் குடும்ப விஷயம். ஒரு கட்சித் தலைவராக ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்றால் அது அவரின் கட்சி சார்ந்த விஷயம். ஆனால், ஸ்டாலின் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல, அவர் தமிழகத்தின் முதல்வரும்கூட. அனைவருக்குமான ஆட்சி என சொல்லி பதவி ஏற்றவர். அப்படியெனில், அனைவருக்கும் பொதுவான அவர், ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் திட்டமிட்டே புறக்கணிக்கிறார் என்றால் அது அவர் ஏற்றுக்கொண்ட பதவி பிரமாணத்தை மீறுவதாகத்தானே அர்த்தம், இது சட்டப்படி குற்றம்தானே? அவர் மீது இதற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் வழிவகைகள் உள்ளன. அது எப்படியோ போகட்டும். ஆனால், இவற்றை எல்லாம் சாமானிய ஹிந்துக்களான நாம் புரிந்துகொள்வதுதான் இங்கு மிகவும் அவசியம்.