பாரதத்தை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜைடஸ் காடிலாவின் கொரோனா தடுப்பூசியான ஜைகோவ் – டி தடுப்பூசி, மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உலகின் முதல் டி.என்.ஏ வகை கொரோனா தடுப்பூசி என்பதும் ஜைகோவ் – டி 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பாரதத்தின் முதல் தடுப்பூசி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசிக்கு கோவிஷீல்டை விட அதிக விலை கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து செலவு தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்குமாறு நிறுவனத்திடம் அரசு கேட்டுள்ளது. விவரங்களை ஆய்வு செய்த பிறகு நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான குழு, தேசிய சுகாதார நிபுணர் குழு இணைந்து விலை நிர்ணயம் நிறுவன பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என எகனாமிக் டைம்ஸ் நிறுவன செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.