கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியில் 2021 – 2022ம் ஆண்டிற்கான மாணவர் சேர்ககை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிதம்பரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் செல்லப்பன் என்பவர் மாணவர் ஒருவரை அக்கல்லூரியில் சேர்க்க சிபாரிசு கடிதம் வழங்கினார். ஆனால் அந்த கடிதத்தை பெற கல்லூரி முதல்வர் தென்னரசு நிராகரித்துள்ளார். இதையடுத்து காட்டுமன்னார் கோவில் வி.சி.க நிர்வாகி பசுமைவளவன் என்பவர், கல்லூரி முதல்வரை செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வி.சி.க பிரமுகர் பசுமைவளவன், கல்லூரி முதல்வரை, ‘சீட்டு கொடுக்கவில்லை என்றால் உன் சீட்டு காலி’ என திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த ஆடியோ பதிவின் அடிப்படையில் காட்டுமன்னார் கோவில் காவல்துறையினர் வி.சி.க பிரமுகர் பசுமை வளவன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதே போல வி.சி.கவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வந்ததை கேட்ட காவல்துறையினரை, நான் யார் தெரியுமா, எங்களுக்கு 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த வழக்கறிஞரை காவலர்கள் கைது செய்தனர். ஏற்கனவே தமிழகத்தில் ஆளும் கட்சி நிர்வாகிகளின் ஆட்டம் அதிகரித்துள்ள சூழலில் தற்போது வி.சி.க உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் இதுபோன்ற கொலை மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது, தி.மு.கவின் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.