உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் தேர்தல்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்ரேலை சேர்ந்த உலகளாவிய தவறான தகவல் பரப்பும் நிறுவனமான ‘டீம் ஜார்ஜ்’ குறித்து, சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு கடந்த எட்டு மாத காலமாக நடத்திய ரகசிய விசாரணைகள் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், கடந்த 20 ஆண்டுகளாக உலகளாவிய ரீதியில் 30க்கும் மேற்பட்ட தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த, இந்த குழுவினர் தன்னியக்க தவறான தகவல், ஹேக்கிங் மற்றும் நாசவேலைகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸை சேர்ந்த ஒரு லாப நோக்கற்ற அமைப்பான ஃபார்பிடன் ஸ்டோரிஸ் உதவியுடன் இணைந்து பணியாற்றும் பத்திரிகையாளர்கள் குழு இந்த ஆய்வை நடத்தியது. லி மாண்டி, டெர் ஸ்பிகல் மற்றும் எல் பாஸ் உட்பட 30 பத்திரிகைகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இது குறித்து இந்த ரகசிய விசாரணையை நடத்தினர். அரசியல் ரீதியாக நிலையற்ற ஒரு தேர்தலை ஒத்திவைக்க உதவி தேவைப்படும் ஆப்பிரிக்க நாட்டிற்கான ஆலோசகர்களாக தங்க்ளை காட்டிக் கொண்டனர். இதுசம்பந்தமாக டீம் ஜார்ஜை தொடர்பு கொண்ட மூன்று பத்திரிகையாளர்கள், வாடிக்கையாளர்களாக நடித்து அந்த ரகசிய வீடியோக்களை எடுத்தனர்.
இந்த ‘டீம் ஜார்ஜ்’ குழுவின் தலைவரான 50 வயதான தல் ஹனான், முன்னாள் இஸ்ரேலிய சிறப்புப் படை ஏஜெண்ட். அவர் இப்போது ‘ஜார்ஜ்’ என்ற மாற்றுப்பெயரின் கீழ் தனிப்பட்ட முறையில் பணிபுரிகிறார். ஒரு தனியார் நிறுவனமாக செயல்படும் டீம் ஜார்ஜ், தேர்தல்களில் ஒரு தடயமும் இல்லாமல் எப்படி புத்திசாலித்தனமாக தலையிடுகின்றனர், தவறான தகவல்களை அவர்கள் எப்படி ஆயுதமாக்குகின்றனர், இணையங்களில் எப்படி ஊடுருவி சதி செய்கின்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சியூட்டும் விவரங்களை இந்த விசாரணை அம்பலப்படுத்துகிறது. உளவுத்துறை சேவைகள், அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தை மறைமுகமாக திசைதிருப்ப விரும்பும் தனியார் வணிகங்கள் தனது சேவைகளைப் பயன்படுத்தக்கூடும் என்று ஹனன் இதில் தெரிவித்தார், சிலர் ‘பிளாக் ஆப்ஸ்’ என்று குறிப்பிடுகின்றனர்.
அவரது ஒரு மின்னஞ்சலின் படி, அவர் லத்தீன் அமெரிக்க நாட்டில் எட்டு வார பிரச்சாரத்தில் பங்கேற்க 2015ல் சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவிடம் 160,000 டாலர்கள் கோரியுள்ளார். ஹனன் மீண்டும் கென்யாவில் 2017ல் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் ஒப்பந்தம் செய்ய முயன்றார். ஆனால் அந்த நிறுவனம் அவரை நிராகரித்தது என தெரிகிறது. அந்த இரண்டு பிரச்சாரங்களும் உண்மையில் நடந்தன என்பதற்கு பெரிதாக ஆதாரம் இல்லை என்றபோதிலும், கிடைத்த மற்ற ஆவணங்கள் அடிப்படையில், 2015 நைஜீரிய அதிபர் தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா ரகசியமாக வேலை செய்தபோது டீம் ஜார்ஜ் அதனுடன் ஒத்துழைத்தது உறுதியாகிறது. இதுகுறித்தி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்சாண்டர் நிக்ஸ் பேச மறுத்துவிட்டார், ஆனால், “உங்களது உத்தேசிக்கப்பட்ட புரிதல்கள் கேள்விக்கு உள்ளாகியுள்ளது” என்று கூறினார்.
இந்த பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜார்ஜ் ஹனான், “நாங்கள் இப்போது ஆப்பிரிக்காவில் ஒரு தேர்தலில் ஈடுபட்டுள்ளோம். எங்களிடம் கிரீஸில் ஒரு குழுவும், எமிரேட்ஸில் ஒரு குழுவும் உள்ளது. நீங்கள் வழிகளைப் பின்பற்றுகிறீர்கள். நாங்கள் முடித்துக் கொடுக்கிறோம். 33 அதிபர்கள் நிலையிலான தேர்தல் பிரச்சாரங்களில் 27ல் வெற்றி பெற்றுள்ளோம். அமெரிக்க அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை. ஆனால் அந்த நாட்டில் இரண்டு பெரிய திட்டங்களில் வேலை செய்து வருகிறோம். எங்களது அனைத்து உறுதிமொழிகளையும் உறுதிப்படுத்துவது சாத்தியமில்லை. டீம் ஜார்ஜ், பணம் அல்லது பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்கள் உட்பட பல்வேறு நாணயங்களில் பணம் செலுத்துவதை ஏற்றுக்கொள்கிறது. தேர்தல் தலையீட்டிற்காக நாங்கள் 6 மில்லியன் யூரோக்கள் முதல் 15 மில்லியன் யூரோக்கள் வரை வாங்குகிறோம் என கூறியுள்ளார்.
எய்ம்ஸ் தொடர்பான போட்களின் ஆன்லைன் செயல்பாடு, தி கார்டியன் மற்றும் அதன் கூட்டாளிகளால் கண்காணிக்கப்பட்டது. பாரதம், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, மெக்சிகோ, செனகல், யு.ஏ.இ உட்பட சுமார் 20 நாடுகள், அதன் போலியான சமூக ஊடகப் பிரச்சாரங்களால் பாதிக்கப்பட்டுள்ளன என இதன் மூலம் தெரியவருகிறது.
அட்வான்ஸ்டு இம்பாக்ட் மீடியா சொல்யூஷன்ஸ், (எய்ம்ஸ்) என அழைக்கப்படும் ஒரு சிக்கலான மென்பொருள் நிரல் தான் டீம் ஜார்ஜின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று. இது டுவிட்டர், லிங்க்ட்இன், ஃபேஸ்புக், டெலிகிராம், ஜிமெயில், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் ஆயிரக்கணக்கான போலியான கணக்குகளைக் கொண்ட கணிசமான தொகுப்பாக உள்ளது. இதில் சில கணக்குகளில், கிரெடிட் கார்டுகளால் இயக்கப்பட்ட அமேசான் கணக்குகள், பிட்காயின் வாலட்டுகள் மற்றும் ஏர் பி.என்.பி போன்ற கணக்குகளும் உள்ளன. ஹனான் ‘பிளாகர்’ என்ற இயந்திரத்தையும் இதற்கு பயன்படுத்துகிறார். இது வலைப்பக்கங்களை தானாக உருவாக்கும் ஒரு நிரலாகும். இது எய்ம்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள சமூக ஊடக கணக்குகள் ஆன்லைனில் தவறான தகவல்களைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஹனான் தனது குழுவை ‘அரசு நிறுவனங்களின் பட்டதாரிகள்’ என்று விவரித்தார். உலகளவில் ஆறு அலுவலகங்களில் அவரது குழுவினர் பணியாற்றுகின்றனர். மேலும் சமூக ஊடக பிரச்சாரங்களுக்கு நிதியளிப்பதில் திறமை கொண்ட மற்றும் ‘உளவியல் போர்’. அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவரது சகோதரர் ஜோஹர் ஹனன் இதில் செயல்படுகிறார். ஜிமெயில் உள்ளிட்ட மின்னஞ்சல்களை உடைத்து தனது குழுவின் ஹேக்கிங் திறமையை செய்தியாளர்களிடம் ஹனான் காட்டினார். கென்யாவில் அடுத்த பொதுத் தேர்தலில் ‘ஒரு முக்கியமான நபரின் உதவியாளரின் ஜிமெயில் கணக்கையும் அவர் திறந்து காட்டினார். பலரும் பாதுகாப்பானது என நம்பும் டெலிகிராமில் மற்றவர்களின் எவ்வாறு கணக்குகளை அணுக முடியும் என்பதையும் அவர் செய்து காண்பித்தார். ஹனான் பல்வேறு அவதாரங்களை ஸ்க்ரோலிங் செய்வதன் மூலம் எய்ம்ஸ் இடைமுகத்தை நிரூபித்தார். ஒரு தேசியம் மற்றும் பாலினத்தைத் தேர்ந்தெடுத்து, பின்னர் சுயவிவரப் புகைப்படங்களை பெயர்களுக்குப் பொருத்துவதன் மூலம் போலி கணக்குகளை எவ்வாறு விரைவாக உருவாக்க முடியும் என்பதையும் விளக்கினார். இந்த வாரம், ஃபேஸ்புக்கின் உரிமையாளரான மெட்டா நிறுவனம், மோசடி கணக்குகளின் மாதிரியை பத்திரிகையாளர்கள் அனுப்பியதை அடுத்து, அதன் வலையமைப்பில் இருந்து எய்ம்ஸ் தொடர்பான போட்களை அகற்றியது.