டிஜிலாக்கர் பயன்படுத்த உத்தரவு

காகிதமில்லா நிர்வாக நடைமுறைகளை ஊக்குவிக்கும் விதமாக, டிஜிட்டல் முறையில் ஆவணங்களை சேமித்து வைக்கும் மத்திய அரசின் டிஜிலாக்கர் செயலியை பயன்படுத்த அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தி.மு.க அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையும் காகிதமில்லா அறிக்கையாகவே தாக்கல் செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது. பாரதத்தில் உள்ள அனைவருக்குமான டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதே டிஜிலாக்கர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என பிரதமர் மோடி இத்திட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தார். இன்றைய காலகட்டத்தில், ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், எரிவாயு பதிவு உள்ளிட்ட பல முக்கியமான ஆவணங்கள் பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது தேவைப்படுகின்றன. இந்த ஆவணங்களை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். இதனை பாதுகாப்பாக எடுத்து சென்று வருவது சில சமயங்களில் சிரமம் என்பதால், மத்திய அரசால் 2015ல் டிஜிலாக்கர் அறிமுகப்படுத்தப்பட்டது. டிஜிலாக்கர் என்பது ஒரு மெய்நிகர் செயலி. இதில் இந்த ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைக்கலாம். தேவைப்படும்போது இந்த ஆவணங்களை அலைபேசியிலேயே சமர்ப்பிக்கலாம்.