கொரோனா தொற்று ஏற்பட்டு, மிதமானது முதல், தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க, டி.ஆர்.டி.ஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள ‘2டிஜி’ எனப்படும் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து வினியோகத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று துவக்கி வைத்தனர். டில்லியில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு,10 ஆயிரம் 2டிஜி மருந்து பாக்கெட்டுகளை வழங்கினார். ‘பொடி வடிவில் உள்ள இந்த மருந்தை, தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். இந்த மருந்து, வைரசால் பாதிக்கப்பட்ட செல்களில் உடனடியாக செயல்பட துவங்கும். இந்த மருந்தால், உயிர் பலியும், ஆக்சிஜன் தேவையும் வெகுவாகக் குறையும்’ என, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.