பழங்குடியினப் பெண்கள் தற்கொலை

கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விதுரா பகுதியில், இரண்டு பழங்குடியினப் பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இதுகுறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டார். அந்த துறையின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கடந்த 2 மாதங்களில் விதுரா, பாலோடு மண்டலத்தில் 2 சிறுமிகள் உட்பட 8 பழங்குடியின பெண்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதில் 6 பேர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இவர்கள் அனைவரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால் தற்கொலைக்கு முயன்றனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. விதுரா, பாலோடு எல்லைப்பகுதிகளில் 192 மலைவாழ் பழங்குடியின குடியிருப்புகள் இருக்கின்றன. காவல்துறையினர், இப்பகுதிகளில் கவனம் செலுத்துவதில்லை, இதனால் போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது. நாடு முழுவதும் இச்செய்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடுஞ்செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, நீதி வழங்கக்கோரியும் குரல்கள் வலுத்து வருகின்றன.