இந்திய நீதித்துறையின் இந்தியமயமாக்கல் குறித்த தேசிய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய கேரள உயர்நீதிமன்ற நீதிபதி என். நாகரேஷ், பி.எப்.ஐ அமைப்பின் தலைவர் ஒருவர் நீதித்துறைக்கு எதிராக கூறிய அவதூறான கருத்துகளுக்கு பதிலளித்துள்ளார்.”நீதித்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்றே முயற்சி நடக்கிறது. தேசத்தின் முக்கிய மூன்று தூண்களில், சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், நீதித்துறை மீதான நம்பிக்கை இன்னும் அப்படியே உள்ளது. அனால், இந்திய அரசியலமைப்பை நாங்கள் ஏற்கவில்லை என்று சில அமைப்புகள் கூறுகின்றன. எங்களிடம் வேறு சில நூல்கள் உள்ளன, அவற்றை நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்துவோம் என்று கூறும் அவர்கள்தான் அரசியலமைப்பின் கீழ் தங்களின் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். இந்திய அரசியலமைப்பை அங்கீகரிக்காதவர்களுக்கு அரசியலமைப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா? நீதித்துறையை இழிவுபடுத்தினால் நீங்கள், அரசியலமைப்புச் சட்டத்தையே இழிவுபடுத்துகிறீர்கள் என்று பொருள்’ என்று கூறினார். மேலும், நீதித்துறையின் இந்தியமயமாக்கல், குறித்து பேசிய அவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சி.ஜே.ஐ. ரமணா கூறியதுபோல, நமது நீதித்துறையின் இந்தியமயமாக்கல் காலத்தின் தேவை. வழக்குரைஞர்கள் வழக்கைப் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளூர் மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்த வேண்டும். சில நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இதனை எதிர்க்கின்றனர். அதில் சில சிக்கல்கள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். சாமானியர் நீதிமன்றத்தில் தனக்கு இடம் இல்லாதவராக உணர்கிறார். நீதிமன்றத்தில் சாமானியர்களை வேற்றுகிரகவாசிகளாக நடத்தக் கூடாது. அமைப்பு மாற வேண்டும்’ என்று தெரிவித்தார்.